குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையத்தை அமைக்க இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகமும், உலக நலவாழ்வு அமைப்பும் உடன்பாடு செய்துள்ளன.
இந்த மையத்தின் இடைக்கால அலுவலகம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை நோக்கம், அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவத் திறனைப் பயன்படுத்துவதும், உலகச் சமூகங்களின் ஒட்டுமொத்த நலவாழ்வை மேம்படுத்துவதும் ஆகும்.
இது குறித்துப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருந்துகள், நலவாழ்வு நடைமுறைகள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய மருத்துவம் நடைமுறையில் உள்ளதாகவும், 80 விழுக்காடு மக்கள் பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.