இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின், இந்த வாரம் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜோவாலனி இது குறித்து பேசுகையில், “மக்கள் எரிபொருள் விலையால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த நிலையை தற்போது மாற்ற வேண்டும். மத்திய பாஜக அரசு, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரியை உயர்த்தியதன் மூலமாக ரூ.26 லட்சம் கோடி வருமானம் பெற்றுள்ளது. இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் படும் இன்னல்கள் மோடி அரசின் காதுகளுக்குக் கேட்கும் படியாக வரும் வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு மக்கள் அனைவரும் வீதிகள், தங்களின் வீடுகளுக்கு வெளியே வந்து காஸ் சிலிண்டர்களுக்கு மாலை போட்டும், மணி அடித்தும் போராட்டம் நடத்துவார்கள். அதேபோல, மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, `மெஹங்கை முக்பாரத் அபியான்’ என்ற பெயரில் மூன்றுகட்டப் போராட்டத்தை நடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, மார்ச் 31-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டமும், ஏப்ரல் 2 முதல் 4 வரை மாவட்ட அளவில் போராட்டமும், ஏப்ரல் 7-ம் தேதி மாநில அளவிலும் போராட்டம் நடத்தப் போவதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய ராகுல் காந்தி, “மாளிகைக்காக மன்னர் தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால், பணவீக்கம் என்ற சுமையை மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்” என்றார். கொரோனா சமயத்தில் முன் களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மக்கள் தங்களின் வீடுகளின் வெளியே வந்து கைத்தட்டி முன் களப்பணியாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.