பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து 30ந்தேதி ‘மணி அடிக்கும்’ போராட்டம்! 3கட்ட போராட்டத்தை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 30ந்தேதி மணி அடிக்கும் போராட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி  அழைப்பு விடுத்துள்ளது. 3 கட்ட போராட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக திடீரென விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து தினசரி உயர்ந்து வருகிறது. ஆனால், விலை உயர்வுக்கு உக்ரைன் ரஷ்யா போர்தான் காரணம் என மத்திய அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம் அறிவித்து உள்ளது. அதன்படி, மார்ச் 31ம் தேதி “மணி அடிக்கும்” நூதனப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, எரிபொருட்களை விலையை உயர்த்தி,  நாட்டு மக்களின் பணத்தை வெட்கமே இல்லாமல் உறிஞ்சி எடுக்கின்றனர். இந்தப் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

முதல்கட்ட போராட்டம்:

மார்ச் 31ம் தேதி எரிபொருள் விலைஉயர்வைக் கண்டித்து தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம்  காலை 11 மணிக்கு மக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு திரண்டும், பொது இடத்தில் குழுமியும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மாலை போட்டு, மணி அடித்தும் பாஜக அரசின் காதுகளில் நமது குரல் எட்டும் வகையில் உரத்து முழக்கமிட்டு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

கையில் கிடைக்கும் எந்தப் பொருளை வைத்தும் ஒலி எழுப்பலாம். டிரம் போன்றவற்றின் மூலமும் நமது குரல் மத்திய பாஜக அரசின் காதுகளை எட்டும் வகையில் சந்தத்தை எழுப்பலாம்.

இரண்டாம் கட்ட போராட்டம்:

ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 4 வரை, காங்கிரஸ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத, சமூக அமைப்புகள் மற்றும் குடியிருப்போர் நல அமைப்புகளுடன் இணைந்து, நாடு முழுவதும் மாவட்ட அளவில் தர்ணா மற்றும் ஊர்வலங்களை நடத்தப்படும்.

மூன்றாம் கட்ட போராட்டம்

ஏப்ரல் 7 ஆம் தேதி, சமூக மற்றும் மத அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் உதவியுடன் அனைத்து மாநில தலைமையகங்களிலும் காங்கிரஸ் “மெஹங்கை-முக்த் பாரத்” தர்ணாக்கள் மற்றும் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்யும்.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்ட;k கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி வத்ரா, உம்மன் சாண்டி, முகுல் வாஸ்னிக், தாரிக் அன்வர், சுர்ஜேவாலா, அஜய் மாக்கன் மற்றும் பொருளாளர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், காங்கிரஸ் கட்சியை மக்களிடையே எடுத்துச்செல்லும் வகையில் 3 கட்ட போராட்டங்களை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  மேலும், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று பரவல் காலக்கட்டமான 2020ம் ஆண்டில், கொரோனா பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவ பணியாளர்களை ஊக்கும் வகையில் பிரதமர் மோடி, மணி அடித்து உற்சாகப்படுத்துவது, 9 நிமிடம் விளக்கு ஏற்றுவது, “Go corona” என்று மக்கள் கூறுவது போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை செய்ய வலியுறுத்தினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் தலைமையும் மணி அடிக்கும் போராட்டத்தை அறிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.