சென்னை: பொது இடத்தை கடவுளே ஆக்கிர மித்திருந்தாலும் அதையும் அகற்றஉத்தரவிடப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்டபலபட்டரை மாரியம்மன் கோயில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் நடைபெறுகிறது. இது தங்களது இடத்துக்குச் செல்லும் பாதையை மறைக்கும் வகையில் உள்ளதால், கட்டுமானத்துக்குத் தடை விதிக்க வேண்டும்என்று நாமக்கல்லைச் சேர்ந்த பாப்பாயி தொடர்ந்த வழக்கில் மாவட்ட முதன்மை முன்சீப் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணை, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று நடந்தது.அப்போது நீதிபதி, ‘‘பொது பாதையை கோயில் நிர்வாகம் மட்டுமின்றி யார் ஆக்கிரமித்தாலும் அதைத் தடுக்க வேண்டும். கோயில் என்ற பெயரில் பொது இடத்தை எளிதாக ஆக்கிரமித்து விடலாம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை.
அப்படி கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும் அதையும் அகற்ற உத்தரவிடப்படும். கடவுள் பெயரால் நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது.எனவே பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 2 மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும்’’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.