மன்னிப்பு கேட்கவேண்டும், ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரவேணடும்- அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக

சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, ‘தமிழக வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார். தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
‘அரசு பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டும் அண்ணாமலை, பிரதமர் மோடி 64 முறை வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தையும் சொந்த முதலீடு செய்வதற்கான பயணம்  என்றுதான் கூறுவாரா?. முதலமைச்சரை இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக சார்பில்  எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது’ எனவும் ஆர்.எஸ். பாரதி எச்சரித்தார். 
திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு அனுப்பி உள்ள வக்கீல் நோட்டீஸ் விவரம்:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிற்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.
முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.
இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.