“லாக்டௌன் போயிட்டு இருந்தப்போ வெங்கட் பிரபு சார்கிட்ட இருந்து போன் வந்தது. ‘ப்ரீயா இருக்கீயா, மீட் பண்ணலாமானு’னார். சரிண்ணேனு சொல்லிட்டு போய் பார்த்தேன். ‘என்னோட வழக்கமான ஸ்டைல் பசங்க இல்லமா படம் பண்ணலாம்னு’ இருக்கேன்னு சொன்னார். உடனே ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, நான் வெங்கட் பிரபு சாருடைய பெரிய பேன். வழக்கமான சினிமா இல்லாம க்ரியேட்டிவா படம் பண்ற டைரக்டர். ‘சென்னை 28’, ‘மங்கத்தா’, ‘மாநாடு’ மாதிரியான வித்தியாசமான படங்கள் கொடுத்துக்கிட்டே இருக்கார். பத்து நிமிஷம் கதை சொன்னார். ரொம்ப ஃபன்னா இருந்தது. ஒரு பெரிய கிக் இவர்கூட படம் பண்றதுல இருந்தது. காமெடி ஜானர் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். இதெல்லாம் ‘மன்மதலீலை’ படத்துல நடந்திருச்சு” என்று உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் அசோக் செல்வன்.
வெங்கட் பிரபு காம்பினேஷனில் இவர் நடித்திருக்கும் ‘மன்மத லீலை’ ஏப்ரல் 1 ரிலீஸ். படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் செம வைரல். பட அனுபவம் குறித்து அசோக் செல்வனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
டீசர் மற்றும் ட்ரெய்லர் எப்போ பார்த்தீங்க?
“ஷூட்டிங் போதே டீசர் பார்த்தேன். இதுவரைக்கும் இப்படியொரு படத்தை ஆடியன்ஸ் பார்த்ததில்ல. எப்படி எடுத்துப்பாங்கனு எக்ஸைட்மென்ட் இருந்தது. ட்ரெய்லர் ரிலீஸாகுறதுக்கு பத்து நாள் முன்னாடி பார்த்தேன். இந்தப் படத்தோட ட்ரெய்லர் கட் பண்றதே ரொம்ப கஷ்டமான விஷயம். ரெண்டு டைம்லைன்ல வர்றதை சரியா காட்டணும்னு சவால் இருக்கு. லீனியர், நான்-லீனியர்னு ரெண்டு விதமான கதை இருக்கு. படத்தை எடிட்டிங்ல கட் பண்றதே கஷ்டமான விஷயம். படத்தோட ட்ரெய்லரின் கடைசி சீன்ஸ் பார்த்துட்டு நிறைய பேர் போன் பண்ணி சிரிச்சாங்க. இவ்வளவு ஏன், இந்தக் காட்சியை எடுத்தப்போ யூனிட் முழுக்கவே சிரிச்சாங்க. எனக்கும் சிரிப்பை அடக்க முடியல. படத்துல பார்க்குறப்போ இன்னும் ஃபன்னா இருக்கும்.”
இந்தப் படம் ரிலீஸானதுக்குப் பிறகு அசோக் செல்வனுக்குக் கல்யாணத்துக்கு பொண்ணு குடுப்பாங்களா?
“ஹா… ஹா… தெரியல. இந்தப் படத்தை பார்த்துட்டு பொண்ணுங்க எப்படி எடுத்துக்க போறாங்கனு யோசனை இருந்தது. 18 ப்ளஸ் ஆடியன்ஸூக்கு ஏத்த மாதிரி சரியான படமா எடுத்திருக்கோம். ஆனா, பிட்டு படம் மாதிரி இருக்காது. படத்தோட ஹீரோ பார்க்குறப்போ அப்பாவியா இருப்பான். பாவமா இருப்பான். ஒரு மன்மதனை பத்தின படமே தவிர படத்துல தப்பா எதுவும் இல்ல. படத்துக்குத் தேவைப்பட்டதுனாலதான் கிஸ் சீன்ஸ் இருக்கு. அதுவும் பெரிய டேக் எடுக்கல. நான் நடிக்குற காட்சிக்கு எப்போவும் அதிகமான டேக்ஸ் கேட்ப்பேன். ஆனா, இதுல கிஸ் சீன்ஸ்ல டேக் கேட்கமா நடிச்சுக் கொடுத்துட்டேன்.”
சமீபத்திய அசோக் செல்வன் படங்கள்ல ஹீரோயின்ஸ் அதிகமா இருக்குற மாதிரியே இருக்கே?
“கதைக்கு ஏத்த மாதிரிதான். ஆனா, ரெண்டு ஹீரோயின்ஸ் இருந்தாதான் அசோக் செல்வன் நடிப்பார்னு மீம்ஸ்ல வருது. படத்துல மூணு ஹீரோயின்ஸ் இருக்காங்க. எல்லார்கூடவும் கெமிஸ்ட்ரி இருக்கணும்னு சரியா பொருந்தி நடிச்சிருக்கேன்.”
‘மன்மத லீலை’ டைட்டில்?
“படத்தோட வொர்க்கிங் டைட்டில் ’20-20’னு இருந்தது. ‘மன்மத லீலை’னு டைட்டில் வைக்கலாமானு வெங்கட் அண்ணாகிட்ட கேட்டேன். கதைக்குச் சரியா பொருந்தி போறதுனால ஓகே பண்ணிட்டார். கமல் சாரின் ‘மன்மத லீலை’ படமும் ஃபேவரைட் எப்போவும். கமல் சாரை மீட் பண்ணப்போ இதைச் சொன்னேன். சந்தோஷப்பட்டார்.”
பிரேம்ஜி மியூசிக் எப்படி வந்திருக்கு?
“இன்னும் படத்தை மியூசிக்குடன் பார்க்கல. படம் பார்க்க வெயிட் பண்றேன். இசை பிளேபாய்ன்னு பிரேம்ஜிக்குப் பட்டமே கொடுத்திருக்கோம். இதுதவிர, படத்துல கேமியோ ரோல்ல பிரேம்ஜி நடிச்சிருக்கார். அவர் வர்ற சீனுக்கு தியேட்டர் அதிரும். ரொம்ப சூப்பரான ஐடியாஸ் இந்தப் படத்துக்குக் கொடுத்திருக்கார்.”