ராமநாதபுரம் மாவட்டம் குதக்கோட்டை கே.கே.கே வலசை கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் மகன் சிவன்ராஜ். இவரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்தப் மாணவியுடன் தனது செல்போனில் நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரை வாங்காமல் சிவன்ராஜை அழைத்து பஞ்சாயத்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, “நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எஸ்.பியிடம் புகார் அளித்துக்கொள்கிறோம்” என மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் போலீஸார் கடந்த 20-ம் தேதி சிவன்ராஜ் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் சிவன்ராஜை கைது செய்யாமல் மீண்டும் மீண்டும் மாணவியின் பெற்றோரை அழைத்து சமரச பேச்சில் போலீஸார் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் சிவன்ராஜின் தந்தை ஊர் முக்கியஸ்தர்களை தூண்டிவிட்டு மாணவியின் பெற்றோரிடம் புகாரை திரும்பப் பெறவில்லை என்றால் கிராமத்தை விட்டு தள்ளி வைத்துவிடுவோம் என அவர்கள் மூலம் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவன்ராஜ் தனது செல்போனில் மாணவியை ஆபாசமாக எடுத்து வைத்திருந்த புகைப்படங்களை கடந்த 24-ந் தேதி முகநூலில் வெளியிட்டுள்ளாளதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியை நேரில் சந்தித்து மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதில், “எங்கள் ஊரை சேர்ந்த தொழிலதிபரின் மகன் சிவன்ராஜ், எங்களது மகளை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாசமாக படங்களை எடுத்து வைத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிரட்டி வருகிறார்.
கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அவர்களுடன் சேர்ந்து கட்ட பஞ்சாயத்து பேசி வருகின்றனர். மேலும் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், முனியசாமி, பிரபாகரன், முருகானந்தம், மற்றொரு முனியசாமி, கர்ணமகாராஜா ஆகியோர் வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி எங்கள் வீட்டிற்கு வரும் பாதை மற்றும் குடிநீர் அனைத்தையும் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதனால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் மன நிலையில் இருந்து வருகிறோம். எனவே சிவன்ராஜை கைது செய்து, சமூக வலைதளத்தை வெளியிட்டுள்ள எனது மகளின் புகைப்படத்தை விரைந்து நீக்க வேண்டும்” என தெரிவிந்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்த எஸ்.பி. கார்த்திக், கட்டப்பஞ்சாயத்து செய்த அனைத்து மகளிர் போலீஸாரை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிவன்ராஜை ஒரு வாரத்திற்குள் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.