புதுடெல்லி: தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்ச் 31-ம் தேதி, வீடுகளிலும் வீதிகளிலும் 11 மணியளவில் மேளம், மணிகள் முழங்கும் புதிய வகைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மேலும், வரும் வியாழக்கிழமை பெட்ரோல், விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜோவாலா கூறியது: “எரிபொருள்கள் விலை உயர்வால் அவதிப்படும் மக்களின் அவல நிலைமை மாற்றப்பட வேண்டும். மத்திய பாஜக அரசு, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரியை உயர்த்தியதன் மூலமாக ரூ.26 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
இன்று (சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து கவலைப்படாமல் இருக்கும் மோடி அரசின் காதுகளுக்கு மக்களின் அவலம் எட்டும் படியாக வரும் வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மக்கள் வீதிகள், தங்களின் வீடுகளுக்கு வெளியே வந்து மேளங்கள், மணிகள் பிற கருவிகளை முழங்கி போராட்டம் நடத்துவார்கள். அதேபோல, மார்ச் 31 ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, “மெஹங்கை முக்பாரத் அபியான்” என்ற பெயரில் மூன்றுகட்டப் போராட்டத்தை நடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “குடிமக்கள் பணவீக்கத்தில் தத்தளிக்கும்போது, மன்னர் அரண்மனைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது நாடு முழுவதும் நீண்ட பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது பணிசெய்துவந்த முன்களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மக்கள் தங்களின் வீடுகளின் வெளியே வந்து கைத்தட்டி முன்களப்பணியாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல், தற்போது காங்கிரஸ் கட்சி பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து மேளம், மணிகளை முழங்கி எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.