மூணாறில் சுற்றுலா பயணிகளை கவரும் ஜெக்ராந்தா பூக்கள்| Dinamalar

மூணாறு–கேரளா மூணாறில் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் பூத்துக்குலுங்கும் ‘ஜெக்ராந்தா’ பூக்களை ரசித்து வருகின்றனர்.

மூணாறில் நிலவும் கால நிலைக்கு ஏற்ப பல்வேறு பூக்கள் பூக்கும். ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ‘ஜெக்ராந்தா’ பூக்கள் அனைவரையும் கவரும். மரங்களில் இலைகள் இன்றி நீல நிறத்தில் பூக்கள் மட்டும் இருக்கும் என்பதால் எளிதாக கவனத்தை ஈர்க்கும். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த இந்த பூக்களின் மரக்கன்றுகளை ஆரம்ப காலத்தில் தேயிலைத் தோட்டங்களை நிர்வாகித்த ஆங்கிலேயர்கள் அழகுக்காக இங்கு கொண்டு வந்து நட்டனர்.

அவற்றில் ஏராளமானவை அழிந்த நிலையில் எஞ்சியவை பள்ளிவாசல், வாகுவாரை எஸ்டேட் பகுதிகளில் பூத்துள்ளன.இரண்டு ஆண்டுகளாக இப்பூக்கள் பூத்தபோதும் கொரோனா கட்டுப்பாடுகளால் அவற்றை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் இல்லை. தற்போது பசுமையாக காணப்படும் தேயிலைத் தோட்டங்களில் இடையே நீல வண்ணத்தில் பூத்துள்ள பூக்களை பயணிகள் ரசித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.