லீசுக்கு வீடு பிடித்து தருவதாகக்கூறி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தரகரை, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காரில் கடத்திச் சென்றனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 25 ஆம்தேதி மதியம் 1 மணிக்கு, காரில் வந்த கும்பல் ஒருவரை கடத்திச் செல்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக தகவல் வந்தது. கடத்தல் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விருகம்பாக்கம் காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். கடத்தல் வாகனம் சென்ற திசை மற்றும் காரின் எண்ணை வைத்து அம்பத்தூர் சூரப்பேட்டை சுங்கச்சாவடியில் உள்ள நெடுஞ்சாலை பாதுகாப்பு காவலர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். கடத்தல் கும்பலிடம் விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கடத்தப்பட்டவரான ரவி, வீடுகளை லீசுக்கு விடுவதாக கூறி பலரை ஏமாற்றியது தெரியவந்தது. ஓரே வீட்டை 3 பேருக்கு லீசுக்கு காட்டி அசோக் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய், அஸ்ரப் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய், நசீர் என்பவரிடம் 8 லட்சம் ரூபாய் என மொத்தம் 18 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அயனாவரத்தில் நசீருதீன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து, தரகர் ரவியை கடத்தி, அவரின் குடும்பத்தாரிடம் பணம் கேட்டுள்ளனர்.
ஆனால், கடத்தலை நேரில் பார்த்த நபர் அளித்த தகவலால், கடத்தல் கும்பலை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறை பிடித்துள்ளது. நசீர், சுனில் குமார், அஜய்குமார், கோபி, சாம்சன், திலீப் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அசோக் மற்றும் அஸ்ரப் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM