புதுடெல்லி: உத்தரப் பிரதேச முதல்வராக நேற்று பதவியேற்ற யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் தானிஷ் ஆஸாத் அன்சாரி (34). இவர் பாஜகவில் அமைச்சராக்கப்பட்டதன் பின்னணியில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
உ.பி. மக்கள் தொகையில் 28 சதவீதம் இஸ்லாமியர்கள். இவர்களை பாஜக தவிர்க்கத் தொடங்கி உள்ளதாகக் கருதப்படுகிறது. வேறுவழியில்லாம் ஆங்காங்கே சில கட்டாயமான சூழலில் மட்டும் அவர்களுக்கு உரிய இடங்களில் மட்டுமே பாஜக முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்தபாகக் கூறப்படுகிறது. இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் அரசியல் செய்யும் பாஜக, அதை உ.பி.யில் தீவிரமாக செயல்படுத்துவதே இதற்குக் காரணம் எனவும் பாஜகவின் இந்த போக்கு கடந்த 2014 மக்களவை தேர்தலுக்கு பின் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டது முதல் பாஜக இதில் தீவிரமாகிவிட்டதாகவும் பேச்சுக்கள் உள்ளன.
கடந்த 2017ல் உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாக பாஜக ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட களமிறக்காமல் தேர்தலை எதிர்கொண்டது.
பிறகு வந்த 2019 மக்களவை தேர்தலிலும் முஸ்லிம்களை பாஜக தவிர்த்தது. 2022 சட்டப்பேரவை தேர்தலுக்கும் முஸ்லிம்கள் யாரும் பாஜகவின் வேட்பாளராகவில்லை. மாறாக, அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (சோனுலால்) சார்பில் ராம்பூரில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அதிகம் கொண்ட அத்தொகுதியில் ஹைதர் அலி கான் தோல்வி அடைந்தார்.
கடந்த, 2017 இல் தனி மெஜாரிட்டியுடன் அமைந்த பாஜக ஆட்சியில் ஒரு முஸ்லிம் அமைச்சராக மோசின் ராசா அமர்த்தப்பட்டார். இவர், உ.பி.யின் மேல்சபையின் உறுப்பினராகவும் தேர்வானார்.
உ.பி.யின் தேர்தல்களில் முஸ்லிம்கள் பாஜக வேட்பாளராவது தவிர்க்கப்பட்டாலும், அதன் அமைச்சரவையில் முஸ்லிம்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டியக் கட்டாயம் உள்ளது. ஏனெனில், இங்கு சுமார் 28 சதவிகிதம் வாழும் முஸ்லிம்களின் இரண்டு பிரிவுகளாக ஷியா மற்றும் சன்னியின் வஃக்பு வாரியத் சொத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றை நிர்வாகிக்கும் பணி, முகலாயர் ஆட்சி முதல் முஸ்லிம்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தமுறை மோசின் ராசாவிற்கு பதிலாக பாஜகவின் மற்றொரு முஸ்லிம் முகமான தானீஷ் ஆஸாத் அன்சாரி அமைச்சராகி உள்ளார். வேட்பாளராகமலேயே அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவரும் மேல்சபைக்கு போட்டியிட்டுத் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த தானீஷ் அன்சாரி? மோசின் ராசா, தானீஷ் அன்சாரி, இந்த இருவருக்கும் இடையிலான ஒரே ஒரு முக்கிய வேறுபாடு மட்டும் உள்ளது. உ.பி.யில் அதிகம் வாழும் ஷியா பிரிவை சேர்ந்தவர் மோசின் ராசா. உ.பி.யின் பலியாவை சேர்ந்த தானீஷ், சன்னி பிரிவு முஸ்லிம்.
இவர் மூலமாக உ.பி.யின் சிறுபான்மை பிரிவினருக்கு தனது அமைச்சரவையில் ஒரு வாய்ப்பளித்துள்ளார் முதல்வர் யோகி. லக்னோ பல்கலைகழகத்தின் மாணவர் பேரவை தலைவராக இருந்த அன்சாரி, அரசியலுக்காக தேர்வு செய்த கட்சியானது பாஜக.
தொடர்ந்து அதன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத்திலும் இணைந்து தீவிரம் காட்டினார். பிகாம் பட்டப்படிப்பை முடித்தவர், மொத்தத் தர நிர்வாகப் பிரிவிலும், பொது நிர்வாகத்திலும் தனது பட்டமேற்படிப்புகளையும் பயின்றார். பிறகு பாஜகவிலும் இணைந்தவருக்கு அக்கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவின் பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. இந்தமுறை 2022 சட்டப்பேரவை தேர்தலில் தானீஷின் பிரச்சாரம் பாஜகவின் நம்பிக்கையை வென்றது.
இதில் தானீஷ், பாஜகவால் மட்டுமே உ.பி.யில் முஸ்லிம்களுக்கு வளர்ச்சியை அளிக்க முடியும் என முன்னிறுத்தி வாக்கு சேகரித்தார். இதற்கு பெரிய அளவில் கிடைக்காத பலன், பாஜக வெற்றிக்கு பின் அன்சாரிக்கு கிடைத்துள்ளது.
உ.பி.யின் முதல்வர் யோகிக்கும் மிகநெருக்கமானத் தலைவராகக் கருதப்படுகிறார் தானீஷ். இதன் காரணமாக உபியின் முக்கிய அறக்கட்டளையான பக்ருத்தீன் அலி அகமது கமிட்டியின் உறுப்பினராகவும் தானீஷ் அமர்த்தப்பட்டுள்ளார்.
இத்துடன் உ.பி. மாநில மொழிகள் குழுவிலும் உறுப்பினராக உள்ளார் தானீஷ். இனி அமைச்சரவையில் அவருக்கு சிறுபான்மை நலத்துறை அளித்து உ.பி.யின் மதரஸாக்களில் பல புதிய மாற்றங்களை கொண்டுவர முதல்வர் யோகி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது .