உக்ரைன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து பல முனைகளிலிருந்தும் உக்ரைனைத் தாக்கி வருகின்றனர். அவர்களது திட்டம் மிகத் தெளிவாக உள்ளது. உக்ரைனுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும். உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து பின்னர் பலத்த தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.
உக்ரைன் ராணுவம் பல இடங்களில் பலத்த பதிலடி கொடுத்து வருவதால் ரஷ்யாவும் தனது தாக்குதல் உத்தியை தீவிரப்படுத்தி வருகிறது. சில இடங்களில் பின்வாங்குவது போல இருந்தாலும் தொடர் தாக்குதலை அது நிறுத்தவில்லை. இதற்கிடையே, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் நேரடியாக களத்தில் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
“Iron Dome”.. அதிரடியான “கேம் சேஞ்சர்”.. உக்ரைனுக்கு அனுப்புமா இஸ்ரேல்?
காரணம், உக்ரைன் ராணுவத் தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தின் ஜெனரல் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயர் யாக்கோவ் ரியசன்ட்செவ் என்பதாகும். இவர் கெர்சான் நகருக்கு வடக்கே, கோர்னோபைவ்கா என்ற இடத்தில் நடந்த கடும் சண்டையில் பலியானதாக கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுடப்பட்டு இவர் பலியாகியுள்ளார்.
இவர் பலியான தகவலை உக்ரைன் அதிபர் மாளிகை தலைமை ஆலோசகர் ஒலெக்சி அரிஸ்டோவிச் கூறியுள்ளதாக கீவ் இன்டிபென்டென்ட் பத்திரிகை செய்தி கூறுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக ரஷ்யத் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ரஷ்ய அரசின் டாஸ் செய்தி நிறுவனமும் இதுதொடர்பாக எந்த செய்தியும் வெளியிடவில்லை.
விமானம் கேட்டோம்.. பீரங்கி கேட்டோம்.. எதையுமே தரலை.. நேட்டோ மீது பாயும் ஜெலன்ஸ்கி
இதற்கிடையே, டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ரஷ்யா தீவிரம் காட்டியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப் பிராந்தியத்தைத்தான் ரஷ்யா அதிகம் குறி வைத்தது. கிழக்கு உக்ரைனில் உள்ளது டான்பாஸ் பிராந்தியம். கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கிரீமியா பிராந்தியத்திற்கு வெகு அருகில் உள்ள நிலப்பரப்புதான் டான்பாஸ். இப்பகுதியைக் கைப்பற்றி விட்டால் ரஷ்யாவுக்கு பல சாதகமான அனுகூலங்கள் இருப்பதால் இந்தப் பிராந்தியத்தைக் கைப்பற்ற ரஷ்ய மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது.
டான்பாஸ் என்பது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரு மாகாணங்களையும் உள்ளடக்கிய பிராந்தியமாகும். இது ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ளது. இந்தப் பகுதியின் சிலவற்றை கடந்த 2014ம் ஆண்டு முதல் ரஷ்ய ஆதரவு போராளிகள் தங்கள் வசம் வைத்துள்ளனர். சில பகுதிகளை மட்டுமே உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்தப் பகுதியை ரஷ்யா முழுமையாக கைப்பற்றி விட்டால் உக்ரைனுக்கான பல்வேறு வகையான சப்ளை பாதிக்கப்படும். உக்ரைன் ராணுவத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்தி2000 கி.மீ தூரத்தில் மனைவி.. பார்த்து 2 வருஷமாச்சு.. இவர்தான் சூப்பர் புருஷன்!