‘ரூ100 கோடி நஷ்ட ஈடு… தி.மு.க அச்சுறுத்தலை கோர்ட்டில் சந்திப்பேன்’: அண்ணாமலை

தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்போ 2022- தொழிற்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை திறந்து வைப்பதற்காக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இன்று ஐக்கிய அரபு அமீரக தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்த எக்ஸ்போவில் பங்கேற்கும் 192 நாடுகளை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தன்னுடன் 5 ஆயிரம் கோடி பணம் எடுத்துச்சென்றுள்ளதாகவும், தூபாயில் உள்ள தமிழக அரங்கை திறந்து வைப்பதற்கு இவ்வளவு பணம் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. சொந்த முதலீட்டை செய்வதற்காக திமுக இந்த பயணத்தை மேற்கொள்கிறதா? இந்த பயணத்தின் மர்மம் என்ன என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியுள்ளதாகவும், இது தொடர்பாக அவர் முதல்வரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக அமைப்புச்செயலாளர் எஸ்ஆர் பாரதி, வெளியிட்டுள்ள நோட்டீசில், முதல்வர் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டதை கொச்சைப்படுத்தும் விதமாக, உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.

முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக 24 மணி நேரத்திற்குள் நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லையென்றால், உங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும். அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்ஆர் பாரதியின் நோட்டீஸ்க்கு பதில் அளித்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.

நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன்… என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.