26.3.2022
08.20: உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், நோயாளிகளை குறி வைத்து ரஷிய படைகள் மீண்டும் மீண்டும் தாக்கி வருவதாக அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்தபட்சம் 34 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
06.20: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ரஷ்யாவிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷிய ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல் செயலிழந்து போகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
04.30: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய நாள் முதல் 134 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 184 பேர் காயமுற்றனர் எனவும், இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.
03.00: ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ள உக்ரைன் நாட்டினருக்காக போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் பிஷப்புகள், தூதர்கள், பக்தர்கள் என 3,500 பேர் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
01.15: உக்ரைனுடனான போரில் இதுவரை 1,351 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,800-க்கும் அதிகமான வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
00.05: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று போலந்து சென்றடைந்தார். உக்ரைன் எல்லை அருகிலுள்ள ராணுவ முகாமுக்குச் சென்ற அவர் அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
உக்ரைன், ரஷியா இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதிபர் ஜோ பைடனின் போலந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.