மும்பை: ஐபிஎல்2022 கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. முதல்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்குகிறது.
டந்த 12ஆண்டுகளுக்கும் மேலாக தோனி கேப்டன்சி தலைமையில் சிஎஸ்கே அணி எதிர் அணியினரை எதிர்கொண்டு பந்தாடி வந்த நிலையில், இந்த ஆண்டு ஜடேஜா கேப்டன்ஷி பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதால், அவரது தலைமையில் முதல் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டு 10 அணிகள் களமிறங்கி உள்ளது. இதனால் ஆட்டங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் இரு பிரிவாக ஏ, பி என அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும்.
ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த முறை லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலத்திலேயே நடத்தப்படுகிறது.
மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
‘ஏ’ பிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இன்று முதல் ஆட்டம் மும்பையில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி, புதிய கேப்டன் ரவிந்திர ஜடேஜா தலைமையில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இன்றைய போட்டியில், சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீளாததால் அவரும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல், ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.