NIA gets 2 days custody to probe LTTE supporter: விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, தனது வங்கிக் கணக்கிற்கு அமெரிக்காவிலிருந்து 75 இலட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கையைச் சேர்ந்த பாஸ்கரனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற 50 வயது பெண், போலி இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த பிரான்சிஸ்கா, ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் சுற்றுலா விசாவில் 2019 டிசம்பரில் சென்னை வந்தார். இருப்பினும், கொரோனா பரவலை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவில் தங்கியிருந்தார். போலி பாஸ்போர்ட் காரணமாக கைது செய்யப்பட்ட அவர் விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்ததாக தமிழ்நாடு காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிராஞ்ச் மூலம் முதலில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு NIA க்கு மாற்றப்பட்டது.
ஜனவரி மாதம் என்ஐஏ தாக்கல் செய்த எஃப்ஐஆர் படி, பாஸ்கரன் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் புலிகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையிலிருந்து பணத்தை திரும்பப் பெற்றனர்.
அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967, பாஸ்போர்ட் சட்டம் 1967 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய வணிகவரி & பதிவுத்துறை; இலக்கை கடந்து சாதனை
பாஸ்கரன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஸ்கரனின் வெளிநாட்டுக் கணக்கிலிருந்து சந்தேகத்திற்கு இடமான வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் அவரது தொழில் பங்குதாரர் பற்றிய விவரங்களை விசாரிக்க அவரை காவலில் எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வாதிட்டது.
இதனையடுத்து இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இருப்பினும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கரனை என்.ஐ.ஏ காவலில் வைத்து விசாரணை செய்யும்போது மனித உரிமை மீறல் ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.