விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டியல் இன இளம் பெண்ணை அவரின் காதலன் ஹரிகரன் உள்பட 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் காதலணும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினருமான ஹரிஹரன், அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜூனைத் அகமது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் ஹரிஹரனும் அவரின் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி சிறுவர்கள் நான்கு பேரும் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரனும், ஜுனைத் அகமதுவும் திமுக-வை சேர்ந்தவர்கள் என்பதால் அரசியல்ரீதியாக இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடரந்து, இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜுனைத் அகமதுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா? இளம்பெண் தொடர்பான ஆபாச வீடியோ வேறு யாருக்கும் பகிரப்பட்டுள்ளதா என போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி வினோதினி, ஆய்வாளர் சாவித்திரி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்ட அவர், முதற்கட்டமாக அதிகாரிகளின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன், அவருடைய நண்பர்கள், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 மாணவர்கள் ஆகிய 8 பேரையும் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. சிறுவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகரிலுள்ள இளையோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
இவ்வழக்கை விரைந்து விசாரிக்கும் பொருட்டு மற்ற மாவட்டங்களில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகளுக்கும் அழைப்புக் விடுக்கப்பட்டு விருதுநகர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். மேலும் இளம்பெண் தொடர்பான ஆபாச வீடியோ வேறு யாரேனுக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளதா?, இதில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை செய்ய சைபர் கிரைம் போலீஸாரின் உதவியை சிபிசிஐடி நாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.