விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகரில் 22 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் நால்வரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் (மார்ச் 24) மாலை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியான வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்பி.முத்தரசி ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில் ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் இருந்த ஹரிஹரன் , ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் உட்பட 4 பேரையும் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைதிகள் நால்வரும் இன்று காலை மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீடு, குடோனில் ஆய்வு: இதற்கிடையில் இந்த வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்கள், அக்கம்பக்கத்தினரிடம் அவர்களின் நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தனர். பின்னர் நால்வரின் வீடுகளிலும் வேறேதும் செல்போன், கணினி, பென் ட்ரைவ் உள்ளிட்ட சாதனங்கள் உள்ளனவா என்று சோதனையிட்டனர். அதன் பின்னர், பாலியல் வன்கொடுமையை நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட குடோனிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.