புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி இருந்தன. எனினும், சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில், பெருமளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் சர்வதேச விமான சேவையும் அடங்கும்.
இந்த நிலையில், கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, அலுவலக அல்லது வர்த்தகம் சார்ந்த மற்றும் வெளிநாட்டு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் விமான பயணிகளுக்கு விரைவில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இணை நோய் கொண்டவர்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரி 10ந்தேதியில் இருந்து மத்திய அரசு முன்னெச்சரிக்கை டோஸ் போட்டு வருகிறது. இதன்பின், 60 வயது கடந்த அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளித்தது.
இதற்காக தனியார் கிளினிக்குகளுக்கு வெளிநாடு செல்லும் பயணிகள் பணம் செலுத்த நேரிடும். 3வது டோஸ் போட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்ட நாடுகள் கட்டாயப்படுத்திய சூழலில் இந்த பயண கட்டுப்பாடுகளை மத்திய வெளிவிவகார அமைச்சகம் சமீபத்தில் சுட்டி காட்டியது.
சர்வதேச விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.