மத்திய அரசின் வயா வந்தனா யோஜனா திட்டம் (PMVVY)மூலம் 10 ஆண்டுகளுக்கு நிலையான மாதாந்திர ஓய்வூதியத்தை பெற முடியும்.
எல்ஐசி வழங்கும் இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும். அதேசமயம், அடுத்த நிதியாண்டின் போது விற்கப்படும் பாலிசிகளுக்கான உத்தரவாத ஓய்வூதிய விகிதங்கள் அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் மதிப்பாய்வு செய்யப்படும்.
இதுகுறித்து எல்ஐசி தனது தளத்தில் கூறியிருப்பதாவது, “2021-22 நிதியாண்டை பொறுத்தவரை, இத்திட்டமானது ஆண்டுக்கு 7.40% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை மாதந்தோறும் வழங்குகிறது. 31 மார்ச், 2022 வரை வாங்கிய அனைத்து பாலிசிகளுக்கும் 10 வருட பாலிசி காலத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய விகிதம் செலுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிசியை வாங்கும் போது ஒப்பந்தம் செய்யப்பட்ட விகிதம் 10 வருட பாலிசி காலத்திற்கும் மாறாமல் இருக்கும்.
தற்போது, பெரும்பாலான முன்னணி வங்கிகள் 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு சுமார் 6.5 சதவீத வட்டி விகிதங்களையே வழங்குகின்றன. ஆனால், PMVVY திட்டத்தில் வருடாந்திர, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர ஓய்வூதிய விருப்பத்தைப் பொறுத்து, அதன் வட்டி விகிதம் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரை மாறுபடும்.
PMVVY என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக பணத்தை முதலீடு செய்யும் திட்டமாகும். இந்த பணத்திற்கான வட்டியை காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர என உங்களது விருப்பப்படி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் அதிகப்பட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அதாவது, மாதம் 9,250 ரூபாய் பென்சன் தொகை கிடைத்திடும். ஒருவேளை, உங்கள் மனைவிக்கும் 60 வயது நிரம்பியிருந்தால், நீங்கள் மொத்தமாக 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். அப்போது, உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 18 ஆயிரத்து 500 ரூபாய் பென்சனாக கிடைத்திடும்.
PMVVY திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இணைய முடியும். மூத்த குடிமக்களுக்கு, நிரந்தரமான வருமானம் கிடைத்திடவே இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அடுத்த நிதியாண்டில் தொகைக்கான வட்டி உத்தரவாதம் மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதால், மார்ச் 31 க்குள் பாலிசியை வாங்கி நிலையான 7.4 வட்டி தொகையை பெறுங்கள்