சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி காஷ்மீரிலிருந்து பைக் பயணமாக கன்னியாகுமரி வந்து சேர்ந்த எல்லையோர காவல் படையை சேர்ந்த 38 வீராங்கனைகளுக்கு குமரி வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எல்லையோர காவல் படை வீராங்கனைகள் காஷ்மீரிலிருந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துடன் இணைந்து, இன்ஸ்பெக்டர் ஹிமான்ஷு சிரோஹி தலைமையிலான பிஎஸ்எஃப் சீமா பவானி ஆல் வுமன் டேர்டெவில் மோட்டார் சைக்கிள் குழுவைச் சேர்ந்த 38 பேர் கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர்.
“பெண்களுக்கு அதிகாரம்” என்பதை வலியுறுத்தும் வகையில்அந்த குழுவினர் 4,884 கி.மீ. தூரம் பயணம் செய்து குமரி வந்தனர். காஷ்மீரில் இருந்து புறப்பட்ட வீராங்கனைகள் குழு சண்டிகர், அமிர்தசரஸ், அட்டாரி, பிகானேர், ஜெய்ப்பூர், உதய்பூர், காந்திநகர், கவாடியா, நாசிக் போன்ற பல்வேறு நகரங்களுக்குச் சென்று இன்று (சனிக்கிழமை) குமரி வந்தடைந்தது.
வீராங்கனைகளுக்கு கன்னியாகுமரியை சேர்ந்த வீரர்கள் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பை அளித்தனர். குமரியில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் வந்து இந்த பயணத்தை நிறைவு செய்த வீராங்கனைகள் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை பின்புலமாக வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிஎஸ்எஃப் டிஐஜி பேபி ஜோசஃப் நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்ததுடன், நாடு முழுவதும் உள்ள இளம் பெண்களை ஊக்குவிப்பதோடு, படைக்கு கவுரவத்தை ஈட்டிய இந்த பயணத்தின் அனைத்து வீராங்கனைகளின் அயராத முயற்சிகளையும் பாராட்டினார்.
இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்ததற்காகவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் செய்தியை பரப்பியதற்காகவும் அனைத்து வீராங்கனைகளுக்கும் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநர் பங்கஜ் குமார் சிங் வாழ்த்து தெரிவித்தார்.