கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் மேற்குவங்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார். அவரது கருத்து தேவையற்றது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் உத்தரப்பிரதேசம், குஜராத், பிஹார் போன்ற மாநிலங்களிலும் நடப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். நேற்று முன்தினம் போக்டுய் கிராமத்துக்குச் சென்ற மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்தார். ‘குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மம்தா பானர்ஜி, 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹூசைன் என்பவரைக் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அனருல் ஹூசைன் கைது செய்யப்பட்டார். 8 பேர் எரித்துக் கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்தது.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணையை மேற்கொண்டது. இவ்வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் வத்சவா, ராஜ பரத்வாஜ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இனி இவ்வழக்கை மாநில போலீஸாரோ அல்லது சிறப்பு விசாரணைக் குழுவினரோ விசாரிக்கக் கூடாது என்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மட்டுமின்றி, கைது செய்யப்பட்டோரையும் சிபிஐயிடம் விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணையின்போது இவ்வழக்கின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத் தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் ஏப்ரல் 7-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.