கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 8 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சம்பவம் நடந்த கிராமத்திற்கு குழுவினர் விசாரணை நடத்தினார்கள். மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டம், போக்டூய் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பகதூர் ஷேக், கடந்த திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த கிராமத்தில் நடந்த வன்முறையில் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில், 2 சிறுவர்கள், பெண்கள் உட்பட 8 பேர் கருகி பலியாகினர். மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்த நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சிபிஐ.யின் தடய அறிவியல் ஆய்வக பிரிவு குழுவினர் அந்த கிராமத்துக்கு சென்று ஆதாரங்களை சேகரித்தனர். இந்நிலையில் நேற்று போக்டூய் கிராமத்துக்கு 20 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் சென்றனர். அவர்கள் 7 பேர் எரித்து கொல்லப்பட்ட வீட்டிற்குள் சென்ற ஆய்வு செய்தனர்.