புதுடெல்லி: நாடு முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. ஐந்து மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றின் விலை 4 மாதங்களுக்கு மேல் உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கடந்த 5 நாட்களாக இவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 800 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்த்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மருந்துகள் விலை கட்டுப்பாடு ஆணை -2013ன் விதிகளின்படி இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தால், பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் உள்ள 800 மருந்துகளின் விலை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 10.7 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. பொருளாதார, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகங்கள் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த விலை உயர்த்தப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு செய்யப்பட்டதைப் போல், இந்தாண்டும் 10.7 சதவீதம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய அரசு அளித்த பதிலில், ‘இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய பரிந்துரைபடி 886 மருந்துகளின் விலை உயரும். 4 மருத்துவ சாதனங்களின் விலையும் மாற்றி அமைக்கப்படும். 1,817 புதிய மருந்துகளின் சில்லறை விலைகளும் நிர்ணயம் செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது முதல் கட்டமாக 800 மருந்துகளின் விலையை 10.7 சதவீதம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதெல்லாம் விலை உயரும்* காய்ச்சல், தொற்று, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், ரத்த சோகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை உயரும்.* பாரசிட்டமால், பெனோபார்பிடோன், பெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின், சிப்ரோப்ளோக்சசின் ஹைட்ரோகுளோரைடு, மெட்ரானிடசோல் போன்ற மருந்துகள், இந்த விலை உயர்வில் அடங்கும்.