CSK vs KKR: ஜடேஜா vs ஸ்ரேயாஸ் – புதிய அணி, புதிய கேப்டன்கள், புதிய சவால்கள்… வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 15 வது சீசன் இன்று தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. இரண்டு அணிகளுமே கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதியவை என்பதால் இந்தப் போட்டிக்கு பயங்கர எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இரு அணிகளின் பலம் பலவீனம் என்ன? எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது? ஒரு சிறு அலசல் இங்கே…

கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதிய இரண்டு அணிகள் என்றாலும் அதே அணிகள் இப்போது இல்லை. இரண்டு அணிகளிலும் எக்கச்சக்க மாற்றங்கள் நடந்திருக்கின்றன. கேப்டன்களே மாறியிருக்கிறார்கள். சென்னை அணிக்கு ஜடேஜாவும் கொல்கத்தாவிற்கு ஸ்ரேயாஸ் ஐயரும் புதிய கேப்டன்களாக பொறுப்பேற்றிருக்கின்றனர். சில வீரர்கள் அப்படியே தக்கவைக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

வெங்கடேஷ் ஐயர்

சென்னை அணியை பொறுத்தவரைக்கும் கடந்த சீசனில் ஆரஞ்சு கேப்பை வென்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட்டை அப்படியே தக்கவைத்திருக்கின்றனர். இந்த முறையும் அவர்தான் ஓப்பனிங் இறங்கப்போகிறார்.

கொல்கத்தா அணியும் கடந்த சீசனில் பெரும் வீழ்ச்சியிலிருந்து மீண்டதற்கு அந்த அணியின் ஓப்பனரான வெங்கடேஷ் ஐயர் மிக முக்கிய காரணமாக இருந்தார். அவரை அப்படியே தக்கவைத்திருக்கின்றனர். இந்த சீசனிலும் அவரே ஓப்பனராக இருப்பார். சென்னை அணியில் ருதுராஜோடு ஓப்பனிங் இறங்க சென்னை அணியின் வழக்கப்படி வெளிநாட்டு ஓப்பனராக டெவான் கான்வே இருக்கிறார். கொல்கத்தா அணியிலும் வெங்கடேஷோடு ஓப்பனிங் இறங்க அலெக்ஸ் ஹேல்ஸை எடுத்து வைத்திருந்தனர். அவர் திடீரென விலகியதால் ஆரோன் ஃபின்ச்சை ரீப்ளேஸ்மெண்ட் ஆக்கியிருந்தனர். இப்போது அவரும் தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் ஆட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ரஹானேவை வெங்கடேஷ் ஐயரோடு ஓப்பனிங் இறக்க வைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

ஆரோன் ஃபின்ச் மட்டுமில்லை. பேட் கம்மின்ஸ், டிம் சவுத்தி போன்ற வீரர்களும் முதல் போட்டியில் ஆடப்போவதில்லை. தரமான இரண்டு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடாமல் இருப்பது கொல்கத்தாவிற்கு பின்னடைவாகவே அமைகிறது. இந்த விஷயத்தில் சென்னை அணிக்குமே சில பிரச்னைகள் இருக்கின்றன. மொயின் அலி முதல் போட்டியிலும் தீபக் சஹார் முதல் பாதி சீசனிலும் ஆடப்போவதில்லை.

சென்னை vs கொல்கத்தா இந்தப் போட்டியை மட்டுமே கணக்கில் கொண்டு பார்த்தால் மொயீன் அலி இல்லாதது பெரிய இழப்பே.

மொயின் அலி

2020 சீசனில் சென்னை அணிக்கு ஓப்பனிங், மிடில், டெத் என எங்கேயுமே பேட்டிங்கில் ஒரு மொமண்டம் கிடைக்கவே இல்லை. ஆனால், கடந்த சீசனில் ஓப்பனிங்கில் ருதுராஜ் + டூப்ளெஸ்சிஸ் கலக்க அந்த மொமண்டமை அப்படியே கீழே விடாமல் மொயின் அலி வெளுத்தெடுப்பார். அவரிடமிருந்து அப்படியே ஜடேஜாவிற்கு சென்று அவர் ஆட்டங்களைச் சிறப்பாக முடித்து வைத்தார். மொயின் அலி இல்லாதது இந்த தொடர் சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்ததைப் போலவே இருக்கும். பெளலிங்கிலும் ஜடேஜாவோடு சேர்ந்து சிறப்பாக வீசினார். ஆல்ரவுண்டராக ஆறாவது பௌலிங் ஆப்சனாக இருந்ததால் தோனிக்குப் பெரும் உறுதுணையாக இருந்தார். அவர் இல்லாதது ஸ்பின் பௌலிங்கிலும் ஒரு பின்னடைவையே கொடுக்கும்.

சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி என இரண்டு வெறித்தனமான ஸ்பின்னர்களை கொல்கத்தா வைத்திருக்கிறது. இவர்களின் 8 ஓவர்கள் எப்போதுமே அபாயகரமானவைதான்.

வருண் சக்கரவர்த்தி

ருதுராஜ் கெய்க்வாட்டும் ராபின் உத்தப்பாவும் நின்று ஆடினால் இவர்களைச் சிறப்பாக அட்டாக் செய்ய முடியும். தவறும்பட்சத்தில் இந்த 8 ஓவர்களில் ஏற்படும் ரன்ரேட் அழுத்தம் கொல்கத்தாவின் சுமாரான வேகப்பந்து வீச்சிற்கும் விக்கெட்டுகளை இழக்க வைக்கும்.

கொல்கத்தா மட்டுமல்ல. சென்னையுமே கூட வேகப்பந்து வீச்சில் கொஞ்சம் திணறவே போகிறது. ப்ராவோ உறுதியாக ப்ளேயிங் லெவனில் இருப்பார் என நம்பலாம். ஆனால், அவர் பழைய ப்ராவோவாக பந்து வீசுவாரா என்பது இப்போதும் சந்தேகமே. ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் என இரண்டு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இருவரில் யாருக்கு ப்ளேயிங் லெவனில் இடம்? அல்லது இருவருக்குமே இடமுண்டா? இவர்களைத் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் எப்படிப் பயன்படுத்துவது? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் புதிய கேப்டனான ஜடேஜாவிடம் பதில் இருக்கும் என நம்புவோம். தீபக் சஹார் இல்லாதது அணிக்கு பெரிய தலைவலியாகவே இருக்கும். பென்ச்சில் இருக்கும் மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் யாருக்குமே பெரிய அளவில் அனுபவம் கிடையாது. ராஜ்வர்த்தன் ஹங்கர்கேக்கர், கே.எம்.ஆசிப், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரில் ஒருவரோ இருவரோ ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. கடந்த சீசன்களில் தீபக் சஹாரும் ஷர்துல் தாக்கூரும் செய்து கொடுத்ததை இந்த சீசனில் இவர்கள் செய்து கொடுக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

இரண்டு அணிகளின் கேப்டன்களுமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கைக்கு எதிராக டி20 தொடரின் மூன்று போட்டிகளிலுமே அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டனாக ஆடியபோது அவரின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அதே தவறு இங்கேயும் நிகழாமல் பார்த்துக்கொள்வார் என நம்பலாம். ஆல்ரவுண்டராக ஃபினிஷராக மட்டுமே ஆடி வந்த ஜடேஜா இப்போது கூடுதலாக கேப்டன் பொறுப்போடும் ஆடப்போகிறார். இந்தக் கணத்தையும் சேர்த்து தாங்கிக் கொண்டு ஜடேஜா சாதிக்க வேண்டும்.

Shreyas Iyer

கடந்த சீசனின் முதல் பாதியில் சென்னை அணி வான்கடே மைதானத்தில் ஆடியிருந்த 5 போட்டிகளில் நான்கில் வென்றிருந்தது. கொல்கத்தா அணியோ வான்கடேவில் இதுவரை ஆடியிருக்கும் 11 போட்டிகளில் 10 போட்டிகளில் தோற்றிருக்கிறது. இரண்டு அணிகளும் நேருக்கு நேராக மோதிய போட்டிகளிலும் சென்னை அணியின் கையே ஓங்கியிருக்கிறது.

ரெக்கார்டுகள் அனைத்தும் சென்னை அணிக்கு சாதகமாக இருந்தாலும், இது ஒரு புதிய நாள், புதிய போட்டி, புதிய சவால் என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் வெல்லலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.