Flipkart, Amazon-ஐ பின்னுக்குத் தள்ளும் அரசின் இ-காமர்ஸ் நிறுவனமான GeM; சரித்திரம் படைக்குமா?

அரசு நிறுவனங்கள் என்றாலே எப்போதும் தூங்கி வழிகிற மாதிரித்தான் இருக்கும்; தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்கிற கருத்தைத் தூள் தூளாக்கி வேகமாக வளர்ந்து வருகிறது மத்திய அரசின் இ-காமர்ஸ் நிறுவனமான ஜெம் (GeM). Government e-Marketplace என்பதன் சுருக்கம், GeM.

ஆறு ஆண்டுகளுக்குமுன்பு அதாவது, 2016 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஜெம் எனப்படும் மிகப் பெரிய ஆன்லைன் இ-காமர்ஸ் தளம். இந்த இ-காமர்ஸ் தளத்தை மத்திய அரசாங்கம் ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நம் நாட்டில் மிகப் பெரிய அளவில் பொருள்களையும் சேவைகளையும் கொள்கின்றன மத்திய, மாநில அரசாங்கங்கள். உதாரணமாக, மத்திய அரசு மருத்துவமனைகள் 10,000 கத்திரிக்கோல்களை வாங்கவேண்டும் எனில், டெண்டர் விட்டு, தரமான பொருளை, குறைந்த விலையில் தருகிறவர்களிடம் வாங்கும். இந்த டெண்டர் முறையில் பொருள்கள் வாங்கும்போது ஊழல் நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இந்த இ-காமர்ஸ் தளம் தொடங்கப்பட்டது.

GeM

குறுகிய காலத்தில் தனியார் நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானுக்கு சரிசமமாக போட்டி போடும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. நிகர பொருள் மதிப்பில் (Gross Merchandise Value – GMV) இந்த இரு தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்திருக்கிறது, ஜெம். கடந்த 2020-ம் ஆண்டு கணக்கின்படி, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 12.5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருள்களை விற்பனை செய்தது. இதன் துணை நிறுவனமான மிந்த்ரா 2 பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்துள்ளது. அமேசான் இந்தியா நிறுவனம் 11.5 பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்தது. ஆனால், ஜெம் நிறுவனம் 13.5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருள்களையும் சேவைகளையும் விற்பனை செய்துள்ளதாக சொத்து மேலாண்மை நிறுவனமான பெர்ன்ஸ்டைன் (Bernstein) தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் சி.இ.ஒ.வாக இருக்கும் பிரசாந்த் குமார் சிங், இந்த நிறுவனம் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார். அடுத்த சில ஆண்டுகளில் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா நிறுவனத்தைவிட ஜெம் நிறுவனம் அதிக மதிப்பில் பொருள்களை விற்பனை செய்யும் என்கிறார்கள்.

ஜெம் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்குப் பொருள்களை விற்றதன்மூலம் உலக அளவில் டாப் 5 இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் 40 லட்சம் சப்ளையர்களும் 59,000 பொருள் வாங்குபவர்களும் உள்ளனர்.

மற்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கும் ஜெம் நிறுவனத்திற்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. மற்ற ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்று, இரண்டு என குறைந்த எண்ணிக்கையில் வாங்கலாம். ஆனால், இதில் மொத்தமாகத்தான் வாங்க முடியும். சுருக்கமாக, மொத்த விலைக்கடை மாதிரி.

e-commerce

இந்த இ-காமர்ஸ் தளம் முதன்முதலில் செயல்படத் தொடங்கியபோது பலரும் மிகவும் யோசித்துத்தான் பொருள்களை வாங்க முன்வந்தார்கள். ஆனால், ஒருமுறை வாங்கியவர்களுக்கு திருப்தியான அனுபவம் கிடைத்ததால், தொடர் வாடிக்கையாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்பது அவசியம் சொல்லியாக வேண்டிய செய்தி.

இந்த இ-காமர்ஸ் தளத்தினால் மிகப் பெரிய நன்மை அடைந்தவர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள்தான். இதில் விற்பனை செய்யப்படும் பொருள்களில் 57% பொருள்கள் எஸ்.எம்.இ.கள் தயாரித்து அளிப்பவைதான்.

கடந்த 2021-22-ல் மட்டும் மொத்த 31.5 லட்சம் ஆர்டர்கள் வந்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட 22% அதிகம். 22-23-ம் ஆண்டில் கொள்முதல் செய்யப்படும் பொருள்களின் மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணையதளம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பொருள்களில் சுமார் ரூ.43,000 கோடி மதிப்புள்ள பொருள்களை மத்திய அரசு நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட ஐந்து மடங்கு அதிகம். இந்தியாவின் அனைத்து மாநில அரசாங்கங்கள் 30% மதிப்பிலான பொருள்களைக் கொள்முதல் செய்துள்ளன.

Ecommerce (Representational Image)

இந்த இ-காமர்ஸ் இணையதளம் 18,68,886 பொருள்களை விற்பனை செய்துவருகிறது. 10,000-த்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த இ-காமர்ஸ் தளத்தில் பதிவு செய்துகொண்டுள்ளன.

ஜெம் நிறுவனம் பொருள்களை மட்டுமல்ல, சேவைகளையும் இந்த இ-காமர்ஸ் தளம் மூலம் தந்து வருகிறது. கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி அளவுக்கு பல விதமான சேவைகளை விற்பனை செய்துள்ளது. ட்ரோன் சர்வீஸ், க்ளவுட் சர்வீஸ் என 1.5 லட்சம் நிறுவனங்கள் பல விதமான சேவைகளை இந்த நிறுவனங்கள் தந்து வருகின்றன.

மத்திய அரசின் ஒரு நிறுவனம் இத்தனை சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்து தெரிந்துகொள்ளும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இனிவரும் காலத்தில் இந்த இன்னும் பெரிய வளர்ச்சி காணும் என்று எதிர்பார்ப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.