RRR: அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம்; படத்தில் வரும் இரு நண்பர்களின் நிஜ வரலாறு இதுதான்!

அல்லூரி சீதாராம ராஜூ

1922, ஆகஸ்டு மாதம் இரவு நேரம்: ஆந்திராவில் சின்டப்பள்ளி ஊரில் காவல் நிலையத்தில் திடீரென 500 பேர் நுழைகின்றனர். அனைவரையும் தாக்கிவிட்டு, அங்குள்ள துப்பாக்கிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கிருஷ்ண தேவிப்பேட்டை, ராஜவோமாங்கி காவல் நிலையங்களிலும் இதே சம்பவம் நடக்கிறது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் யாரென்று நமக்கு வேண்டுமானாலும் குழப்பமாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள போலீஸாருக்கு ஒரு குழப்பமும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்த காவல் நிலையங்களில் என்னென்ன பொருட்கள் கொள்ளைபோனது என்பதை தெளிவாக எழுதி, இறுதியில் ‘இந்த கொள்ளையெல்லாம் நிகழ்த்தியது நான்தான். நான் இந்தக் காட்டிற்குள்தான் வசிக்கிறேன். முடிந்தால் என்னைப் பிடி.’ இப்படிக்கு அல்லூரி சீதாராம ராஜூ என்று அவர் எழுதி வைத்துவிட்டு தான் செல்வார். இவரின் கதையை தான் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ராம்சரண் ஏற்று நடித்துள்ளார். அல்லூரி ராஜூ வின் காதலி சிதாவின் கதாப்பாத்திரம் தான் இந்தப் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்கும் அலியா பட் ஏற்றிருக்கும் பாத்திரம்

ஆர் ஆர் ஆர்

19 -ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, அங்குள்ள காடுகளில் வாழும் ஆதிவாசி மக்களால் காடுகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது, அதனால் காடுகளைப் காப்பதாக சொல்லி, 1882 -ல் மதராஸ் காடுகள் சட்டத்தைக் கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள காடுகளில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. அங்குள்ள மலைவாழ் மக்கள் `பொடு’ எனும் விவசாய முறையைக் கையாண்டு வந்தனர். அதாவது, ஒரு இடத்தில் ஒரு முறை விவசாயம் செய்தால், அந்த நிலத்தை எரித்து விட்டு வேறு இடங்களில் விவசாயம் செய்வது. இதை இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலங்களில் ஜூன் விவசாய முறை என்று வழங்கி வருவர். இது இன்றும் அங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தினால், ஆந்திர பிரதேசத்தில் வாழும் மலைவாழ் மக்களால் விவசாயம் செய்ய முடியாமல் போனது. இதனால் அவர்கள் வாழ்வாதாரத்தை நோக்கி வேறு தொழில் செய்ய வேண்டும். இதனால் விவசாயம் பார்த்த பெரும்பாலானோர் பிரிட்டிஷ் அரசின் கீழ் வேலை பார்க்கத் தொடங்கினர். அவர்களை சாலை அமைப்பது, அணை கட்டுவது, போன்ற வேலைகளுக்கும் சிப்பாயாக பணியிலமர்த்தியும் ஆங்கில அரசு பயன்படுத்திக் கொண்டது. இதை எதிர்த்துதான் அல்லூரி சீதாராம ராஜூ அங்குள்ள மக்களோடு சேர்ந்து கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து போராடினார். அதில் ஒரு பகுதி தான் நாம் மேலே பார்த்த அந்த சம்பவம்.

ராம ராஜு நல்ல செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், அந்த காலத்திலேயே பள்ளி படிப்பு முடித்து, கல்லூரியிலும் படித்தார். அப்போது விசாகப்பட்டினத்தில் கல்லூரியில் படிக்கும்போது, அருகிலிருக்கும் காடுகளுக்குச்சென்று அங்குள்ள மக்களிடம் பழகி, அவர்கள் வாழக்கை குறித்து அறிந்து கொண்டார். அப்போது விசாகப்பட்டினத்தில் கல்லூரியில் ஒரு பணக்கார நண்பனின் நட்பு இவருக்குக் கிடைத்தது. தன் நண்பனின் தங்கையை உயிராக நேசித்தார் மீது ராஜூ. அவள் தான் சீதா. ஆனால் அவர் காதல் கொண்டிருந்த சீதா சிறிது காலத்திலேயே இறந்துவிடுகிறார். இதனால், அவரின் நினைவாக, தம் பேருக்கு முன்னால் சீதாவை சேர்த்துக்கொண்டு சீதா ராம ராஜூ என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். கல்லூரியிலிருந்து பாதிலேயே நின்று விட்ட சீதாராம், தொடர்ந்து படிக்க விருப்பமில்லாமல் தன்னுடைய 18 வயதில் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள தயாரானார். காடுகளில் சென்று மலைவாழ் மக்களோடு வாழந்தார். பின், அவர்களை வழிநடத்தி செல்லும் தலைவரானார். எல்லோரும் ஒரு மனதாக ராமராஜூவை நம்பினர். அம்மக்களின் உதவியோடு 1922 முதல் 1924 வரை ஆங்கில அரசுக்கெதிராக ரம்பா கிளர்ச்சியை நிகழ்த்தினார் ராமராஜூ. அவர்களது ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களையே தாக்குவது, கெரில்லா முறையில் போர் புரிவது போன்ற பல்வேறு வித்தைகளை கையாண்டு திக்குமுக்காட வைத்தார். இவரை கடைசி வரை பிடிக்கவே முடியாத ஆங்கில அரசு, ராமராஜூவை பிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு பத்தாயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அப்போதும் ஊர் மக்கள் யாவரும் அவரைக் காட்டிக்கொடுப்பதாய் இல்லை. அவருக்கு நெருக்கமானவர்களை கொடுமையான முறையில் துன்புறுத்தும் அளவிற்கெல்லாம் சென்றது ஆங்கில அரசு. இறுதியில் சின்டப்பள்ளி காட்டில் அல்லூரி சீத்தாராம ராஜூவை பிடித்து, அவரை மரத்தில் கட்டி சுட்டுக் கொன்றார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.

இவரை குறித்து ஏற்கனவே 1974 இல் ஒரு திரைப்படம் வந்துள்ளது.

ஆர் ஆர் ஆர்

கொமாரம் பீம்

இந்தப் படத்தில் வரும் மற்றொரு கதாப்பாத்திரமாக வருவது NTR ஏற்று நடித்துள்ள கொமாரம் பீம். கொமரம் பீமுமே ராமராஜூவை போல ஆங்கில அரசுக்கு எதிராக போரிட்டவர்தான். ஆனால் இவர் அப்போதிருந்த ஹைதராபாத் நிசாம் அரசுக்கெதிராகவும் போராடினார். பீம் கல்விகூட கிடைக்காத ஒரு மிகவும் பின்தங்கிய ஊரில் பிறந்தார். வாழ்வாதாரத்திற்காக ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வது எப்போதும் ஒரு வாடிக்கையாகவே இருந்தது. இதுதவிர ஒவ்வொரு இடங்களிலும் ஜமீன்தார் கொடுமை வேறு. இவர் கோந்தி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராதலால், ஆங்கில அரசு கொண்டு வந்த காடுகள் சட்டம் இவரையுமே பாதித்தது. அதனால் இவருமே ராமராஜூவை போல போராடினார். அப்படி ஒருமுறை போராட்டத்தில் தான் பீமின் தந்தை கொல்லப்பட்டார். பீமின் தந்தை இறப்பிற்கு பிறகு, அவர் கரீம்நகர் அருகிலுள்ள சர்தாபூருக்கு இடம்பெயர்கிறார். அவருடன் சேர்ந்து நிறைய கோந்தி மக்களும் இடம்பெயர்கின்றனர். அங்கு லக்ஷ்மன் ராவ் எனும் ஜமீன்தார் நிலத்தில் விவசாயம் செய்கின்றனர். அப்போது முறையாக வரி கட்டாததால் லஷ்மன் ராவ் சித்திக்சாப் என்பவரை பயிரில் விளைந்த பொருட்களை பறிமுதல் செய்ய சொல்லி அனுப்புகிறார். அப்போது பீமிற்கும் சித்திக்சாபிற்கும் ஏற்பட்ட தகராறினால் சித்திக்சாப் பீமால் கொல்லப்படுகிறார். உடனே பீம் அங்கிருந்து தப்பி விதோபா எனும் ஒரு பத்திரிகையாளரிடம் சேர்கிறார். ஒரு சில காலங்களில் விதோபா கைது செய்யப்படவே, அங்கிருந்து தப்பி அசாமிற்கு சென்று விடுகிறார் பீம். அங்கு நான்கு வருடங்கள் வேலை பார்த்துவிட்டு மீண்டும் தம் சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது மீண்டும் பிரிட்டிஷ் அரசு அவரை விவசாயம் செய்ய விடாமல் தடுக்கிறது. ஆயுதம்வழி ஒன்று தான் இதற்கு தீர்வு என்று கருதி ஆயுதமேந்தினார் பீம். அங்குள்ள கோந்தி மலைவாழ் மக்களுடன் சேர்ந்து கோந்த்வானா எனும் ஓர் தனி ராஜ்யத்தை அறிவித்தார். கூடவே கம்யூனிஸ்ட்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டு ஆங்கிலேய அரசுக்கெதிராக ஆக்ரோஷமாக போராடினார். நீண்ட போராட்டதிற்கு பிறகு, பீம் என்கவுண்டரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றும் கோந்தி மக்கள் பீமின் இறந்த நாளை அஸ்வயுஜா பௌர்ணமியாக அறிவித்து துக்கம் அனுசரித்து வருகின்றனர்

ராம் சரண் – RRR

இவர்கள் இருவருமே சமகாலங்களில் ஆங்கில அரசுக்கெதிராக ஆயுதமேந்தி போர் புரிந்தவர்கள். ஆனால் இவர்கள் இருவரின் நட்பைப் பற்றிய குறிப்புகள் இல்லை. இவர்கள் இருவரின் வாழ்வைப் புனைவு கலந்து இயக்குநர் ராஜமௌலி – ஆர் ஆர் ஆர் படத்தை திரைப்படமாக்கியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.