அணு ஆயுதங்களைப் பற்றிய ரஷ்யாவின் தற்பெருமை, ஆபத்தான ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள் ளார்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்கிறது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
உக்ரைன் போரில் ரஷ்யா சுமார் 2 லட்சம் வீரர்களை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் பேர் வரையில் இந்தப் போரில் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கத்தார் தலைநகர் தோஹாவில் சர்வதேச அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அணு ஆயுதங்களைப் பற்றிய ரஷ்யாவின் தற்பெருமை, ஆபத்தான ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது. எரிசக்தியை ஆயுதமாகப் பயன்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிகளை எதிர்கொள்வதற்கு, கத்தார் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ரஷ்யாவின் முயற்சியை முறியடிக்க கத்தார் இதைச் செய்ய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமின்றி முழு உலகையும் அணு ஆயுதத்தால் அழிக்க முடியும் என்று ரஷ்ய நாட்டவர்கள் தற்பெருமை பேசி வருகின்றனர்.
1990-களில் உக்ரைன் தனது அணுசக்தி கையிருப்பை அகற்றியபோது ரஷ்யா உட்பட உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கின. ரஷ்யா தனது அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். அதேநேரம், அமைதிக்காக உக்ரைன் தனது எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது.
உக்ரைன் நகரங்களையும் இங்குள்ள மக்களையும் காப்பாற்றக் கட்டுப்பாடற்ற ராணுவ உதவிதேவைப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யா எங்களுக்கு எதிராகக் கட்டுப்பாடின்றி முழு ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது. எனவே, அதிலிருந்து காப்பற்ற முழு ராணுவ உதவி எங்களுக்குத் தேவை.
ரஷ்யா பாஸ்பரஸ் ஆயுதங் களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது. இது ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது தீப்பிடித்து கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் இந்த பாஸ்பரஸ் குண்டுகளால் பெரியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் உயிரிழக்கின்றனர். எங்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் வழங்குவதன் மூலம், ரஷ்ய தாக்குதல்களிலிருந்து உக்ரைன் நாட்டையும் உக்ரைன் மக்களையும் நேட்டோ அமைப்பால் காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.