அரக்கோணம்: அரக்கோணத்தில் கஞ்சா பதுக்கப்பட்ட வீட்டில் சோதனை செய்ய சென்ற காவலர்கள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா நேரில் விசாரணை நடத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவு பேரில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபாசத்யன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சாராய ரெய்டும், கஞ்சா சோதனையும் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரக்கோணம் பகுதியில் தனிப்படை காவலர்கள் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வாலி என்பவரை காவல் துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அரக்கோணம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலம் வாங்கி அதை விற்பனை செய்து வருவதாக வாலி காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, ஜெயசூர்யாவை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், ”அரக்கோணம் அடுத்த உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் தான் கஞ்சா மொத்த வியாபாரி. அவரிடம் இருந்து தான் நாங்கள் சில்லறை முறையில் கஞ்சாவை வாங்கி அதை விற்பனை செய்து வருகிறோம்” என தகவல் கொடுத்தார். இதையடுத்து, அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், நகர காவல் துறையினர் சிறப்பு தனிப்படை காவல் துறையினர் அரக்கோணம் அடுத்த உப்புக்குளம் பகுதியில் உள்ள ரியாஸ் வீட்டில் சோதனை நடத்த இன்று மதியம் சென்றனர்.
காவல் துறையினர் வருவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட ரியாஸ் அங்கிருந்து தப்பியோடினார். காவல் துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தச்சென்ற போது அங்கு கைபையில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், காவலர்கள் சந்தோஷ், ஏழுமலை ஆகிய 2 பேரும், ரியாஸ் வீட்டை அடையாளம் காட்டச்சென்ற ஜெயசூர்யா என்பவரும் படுகாமடைந்தனர்.
உடனே, 3பேரும் மீட்கப்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு 3 பேரும் மாற்றப்பட்டனர். இதைதொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் ரியாஸ் வீட்டில் வெடித்தது நாட்டு வெடி குண்டு என்பது தெரியவந்தது. கஞ்சா வியாபாரி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வந்தது எப்படி? காவல் துறையினர் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே அறிந்த கஞ்சா வியாபாரி ரியாஸ் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்தாரா? வெடித்த நாட்டு வெடிகுண்டு எந்த வகையை சேர்ந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்த தகவல் கிடைத்ததும் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜியா, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபாசத்யன் உட்பட பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிறகு, தப்பியோடிய கஞ்சா வியாபாரி ரியாஸை பிடிக்க வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.