புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்ற தலைப்பில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தி வருகிறார். அதன்படி இன்று அவரது 87வது அத்தியாய உரையில், ‘நாட்டின் ஏற்றுமதி 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள், பொறியாளர்கள், சிறுதொழில் புரிவோர் உள்ளிட்ட பலரது உழைப்பால் ஏற்றுமதியில் சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித்து வருவதுடன் விநியோகச் சங்கிலி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் ஜெம் தளத்தின் வாயிலாக, அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை கொள்முதல் செய்துள்ளது. பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்குப் பொருட்களை விற்க முடிந்த நிலை மாறி சிறிய வணிகர்களும் அரசுக்குத் பொருட்களை விற்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுர்வேத மருந்துகளுக்கான சந்தை 22,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது, தற்போது 1,40,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. நாட்டில் நதிநீர் பாதுகாப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் ஆயுஷ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தரமான பொருட்களை உலகுக்கு விரைந்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.கேரள மாநிலம் முப்பத்தடம் நாராயணன் என்பவர் கோடையில் பறவைகளும் விலங்குகளும் நீருக்காகத் தவிக்கக் கூடாது என்பதற்காக, மண் பாத்திரங்களை விநியோகம் செய்யும் இயக்கத்தை நடத்தி வருகிறார். இதுவரை 150க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூய்மைப்படுத்திய சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டுகிறேன்’ என்றார்.