புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று மாலை மாலத்தீவு தலைநகர் மாலேசுக்கு சென்றார்.
பின்னர் அவர் மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித்துடன் இரு நாட்டு உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா-மாலத்தீவு உறவு என்பது இருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் இதுவரை இல்லாத அளவுக்கு மேம்படுத்தும் வகையில் உச்சம் தொட்டுள்ளது.
பொதுவான சவால்களை எதிர்கொள்வது மட்டுமின்றி பிராந்திய நிலை தன்மைக்கான சக்தியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே உறவு திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ஜெய்சங்கர் இலங்கை செல்கிறார். அங்கு நாளை (28-ந்தேதி) முதல் 30-ந்தேதி வரை தங்கி இருக்கும் ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கிறார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை மறுநாள் (29-ந்தேதி) பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் ஜெய்சங்கர் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் இலங்கையில் பல்வேறு தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள நிதி உதவி கேட்டு கடந்த வாரம் அந்நாட்டு நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தார்.
இந்த சூழ்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா- இலங்கை இடையே சமீபத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.