இலவச ரேஷன் அரிசி திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும்ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில்பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப் பட்டன.
அதாவது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் தலா 5 கிலோ அரிசி அல்லது தலா 5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. அவ்வப்போது இலவச ரேஷன் அரிசி திட்டம் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மார்ச் மாதத்துடன் திட்டம் நிறைவடைய இருந்தது.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி வரும் செப்டம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி திட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்துக்காக இதுவரை ரூ.2.60 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கும் நிலையில். மேலும் 6 மாதங்களுக்கு திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் கூடுதலாக ரூ. 80,000 கோடி செலவாகும்.
உ.பி. முதல்வர் அறிவிப்பு
உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்ய நாத் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவரதுதலைமையில் நேற்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, “இலவச ரேஷன் பொருட்கள் விநியோகத்தை உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கமுடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் 15 கோடி மக்கள் பலன் அடைவார்கள்” என்று தெரிவித்தார். எனினும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு இத்திட்டத்தை நீட்டித்து உள்ளதால் உ.பி.யும் அதில் அடங்கும்.- பிடிஐ