கீவ்:
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 32வது நாளாக நீடிக்கிறது. முதலில் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷிய படைகள் தற்போது ராணுவத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யும் எரிபொருள் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.
ரஷியாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரஷிய படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் உக்ரைன் குடிமக்கள் உணவு மற்றும் குடிநீருக்கு அல்லப்படுவதாகவும், மக்கள் மத்தியில் ரஷியா கடும் வெறுப்பை விதைத்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷியப் படைகளைத் தடுக்க டாங்கிகள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை கூடுதலாக வழங்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷியா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
‘ரஷிய அதிபர் புதின், முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியாது என்று உணர்ந்துள்ளார். அத்துடன், கொரிய முறையில் நாட்டைப் பிரிக்க முயற்சிப்பார். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை ஒன்றுசேர்த்து சுதந்திர உக்ரைனுக்கு எதிராக நிறுத்த முயற்சிப்பார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில், அரசுக்கு இணையான கட்டமைப்புகளை அமைப்பதற்கும், உக்ரேனிய நாணயமான ஹிரிவ்னியாவைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் ரஷியா முயற்சி செய்கிறது. ஆனால், உக்ரைனின் எதிர்ப்பு ஒட்டுமொத்த கொரில்லா போராக வளர்ந்து, ரஷியாவின் முயற்சிகளை தடம்புரளச் செய்யும்’என்றார் கைரிலோ புடானோவ்.