சென்னை: துபாய் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
உலகளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச தொழில்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.சில மாதங்கள் நீடிக்கும் இந்த கண்காட்சி, இம்முறை துபாயில் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இக்கண்காட்சி வரும் மார்ச் 31-ம் தேதி நிறைவு பெறுகிறது. இக்கண்காட்சியில், இந்தியா சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகம் சார்ந்த அரங்கங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த அரங்கங்களை திறந்து வைக்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை துபாய் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பில் அதிகாரிகளும் தமிழ் அமைப்புகள் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் அவர் ஆலோசனைநடத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையில் உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழகத்துக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது.
இ்ந்த நிகழ்வில், தமிழகத்தில் தொழில் தொடங்க நிலவும் சாதகமான சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துக் கூறினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சர்களையும் தமிழகம் வரும்படியும் முதல்வர் அழைப்பு விடுத்தார். இதுதவிர, தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் குழுவினை தமிழகத்துக்கு அனுப் பும்படியும் அமைச்சர்களிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை செயலர் ச. கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர், துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி மற்றும் இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர் அகமது அல் பன்னா ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை 7.20 மணிக்கு, சர்வதேச கண்காட்சியில் தமிழக அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதில், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகள், முதல்வரின் மனைவி துர்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த, தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான அரங்குகளை பார்வை யிட்டார்.
அதன்பின்‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழக பாரம்பரியத்தை விளக்கும் பரதம் மற்றும் மரக்கால், பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞர்களின் கலை மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சியை, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமர்ந்து பார்வையிட்டார். நிகழ்ச்சி முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்த கண்காட்சியில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் சுற்றுலா, மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பு, கலை மற்றும் கலாச்சாரம், தொழில் பூங்காக்கள் மற்றும் முக்கிய துறைகள் பற்றிய தகவல்கள் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட உள்ளன. எப்படி உலகத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நம்முடைய தமிழக அரசு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறதோ அது தொடர்ந்து நடைபெறும். எனவே ஒன்றிணைந்து வேற்றுமையிலே ஒற்றுமை காணவேண்டிய நிலையில் இந்தச் சிறப்பான கண்காட்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.