இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பிரதமர் இம்ரான் கானை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இம்ரான் கான் அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளன. இதற்கிடையே இம்ரான் கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.
அக்கட்சியை சேர்ந்த 24 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியானது. இது இம்ரான் கானுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று அரசு கவிழும் நிலை உள்ளது.
நேற்று முன்தினம் பாராளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே சபாநாயகர் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஒத்தி வைக்கப்பட்ட பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்பில் தோல்வி உறுதி என்பதால், ஒருநாளைக்கு முன்னதாகவே இன்று இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல் பரவியது. இன்று பொதுக்கூட்டம் நடத்தி, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்று உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் கல்வித்துறை மந்திரி ஷப்காத் மெஹ்மூத் பேசுகையில், ஒட்டுமொத்த நாடும் இம்ரான் கானுடன் நிற்பதாக கூறினார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் உண்மையை ஆதரிக்க வேண்டும், இம்ரான் கானுடன் நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது ஒருபுறமிருக்க, இம்ரான் கானின் ஊழல் அரசாங்கத்தை கவிழ்த்து பாகிஸ்தானின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டும் என பொதுமக்களை எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரிப் கேட்டுக்கொண்டார். இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் இணையவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.