புதுடெல்லி: “பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ள கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்பியுள்ளனர்” என்று வினவியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.
1990-களின் தொடக்கத்தில், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் காரணமாக, அங்கே சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த காஷ்மீரி பண்டிட்கள் எனப்படும் இந்துக்கள், கூட்டம்கூட்டமாகத் தாய் மண்ணைவிட்டு வெளியேறினர்.
காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றாசிரியர்கள் உள்ளிட்டோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் அண்மையில் தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் இந்தப் படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு விடுமுறை எல்லாம் அளிக்கப்பட்டது. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில்”மாநிலத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என்று பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் பதில் அளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை யூடியூப்பில் வெளியிடுமாறு பாஜகவினர் கேட்க வேண்டும். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும்” என்று கிண்டல் தொனியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் பாஜகவை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர், “காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட இந்த 25 ஆண்டுகளில், மத்தியில் பாஜக 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. இத்தனை ஆண்டுகளில் காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் திரும்ப என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஒரு பண்டிட் குடும்பம் கூட அங்கு திரும்பியதாகத் தெரியவில்லை.
ஒரு படத்தில் யாருடைய துயரையோ ஆவணப்படுத்தி அதன் மூலம் ஆதாயமும், பணமும் ஈட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. இது ஒரு குற்றம். இதனை தேசம் பொறுத்துக் கொள்ளாது” என்று கூறியுள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் தான் கேஜ்ரிவால் இவ்வாறு கூறினார்.