’கருடன் இறந்தபின் என்ன ஆச்சு’ – தெறிக்கவிடும் கேஜிஎஃப் – 2 ட்ரெய்லர்! மிரட்டும் சஞ்சய் தத்

கேஜிஎஃப் – 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “கேஜிஎஃப்”. கோலார் தங்க வயல் தொடர்பான கதைக்களத்துடன் ‘யாஷ்’ நடிப்பில் இத்திரைப்படம் வெளியானது. திரையிடப்பட்ட பல மொழிகளில் பெரு வெற்றி பெற்று வசூல் சாதனையயும் படைத்தது. வசனம் மற்றும் இசைக்காகவே தமிழிலும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் 2வது பாகத்திற்கான பணியில் தீவிரம் காட்டினர். கொரோனா காரணமாக படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போடப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், ரவி பஸ்ரூர் இசையமைத்த படத்தின் முதல் பாடலான “டூஃபான்” சமீபத்தில் வெளியானது. “அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாச்சு. நீங்க உயிரோட இருக்கணும்னா அவன் குறுக்க போயிடாதீங்க” என்கிற அழுத்தமான வசனத்துடன் அந்த பாடல் துவங்குகிறது. டூஃபான் என்பதற்கு புயல் என்று பொருள். இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப்க்கே உண்டான அதகளங்களுடன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது ட்ரெய்லர். திரைப்படம் ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருடன் இறந்தபிறகு ஆதிராவின் பிரவேசம் தான் கதையை நகர்த்தப் போவது போல ட்ரெய்லரில் கூறப்பட்டுள்ளது. ஆதிராவாக தோன்றும் சஞ்சய்தத் பார்வையிலேயே வில்லத்தனத்தை கடத்துகிறார். “அங்க விழும் பிணங்களுக்கு இருக்கும் மரியாதையை அங்கிருக்கும் கழுகுகளிடம் கேட்டுப்பார்” என்று அறிமுகமாகி “என் கேஜிஎஃப்க்காக நான் வந்துட்டு இருக்கேன்னு அவங்ககிட்ட சொல்லிடு” என்று சொல்லி புல்லரிக்க வைக்கிறது சஞ்சய் தத்தின் “ஆதிரா” கதாப்பாத்திரம். அம்மா செண்டிமெண்டை இந்த டிரெய்லரிலும் தூவியிருக்கிறார்கள். “இந்த உலகத்துல இருக்க எல்லா தங்கத்தையும் உனக்கே தரேம்மா” என்று குட்டி ராக்கி சொல்லும் வசனமும் கவனம் பெறுகிறது.

image

பெண் அரசியல்வாதி கேம் சேஞ்சராக உருவெடுக்கும் விதத்தில் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. எப்போதும் போல அனைவரது வசனங்களும் கவனம் ஈர்க்கின்ரன. ராக்கியின்  “I don’t like violence. I avoid it. But Violence likes me. SO I can’t avoid” என்ற ஆங்கில வசனம் கவனம் பெறுகிறது. ராக்கியின் வசனத்தில் இம்முறை “ முகநக நட்பது நட்பன்று” என்ற திருக்குறளும் இடம் பெற்று விட்டது.

image

முதற்பாகத்தில் கதை சொல்லியாக வந்த பத்திரிகையாளராக இம்முறை பிரகாஷ் ராஜ் வருவார் போல.! சில வினாடிகள் திரையில் வந்து நினைவில் நின்று விடுகிறார். இன்னும் பல வசனங்கள், திக் திக் பிஜிஎம்கள் என கலக்கல் தொகுப்பாக வெளியாகியுள்ளது ட்ரெய்லர். இந்த ட்ரெய்லரில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் சஞ்சய் தத்தின் ஆதிரா கேரக்டர் மிரட்டலாக உள்ளது. அவர் வரும் போது இடம்பெறும் வசனங்களும் தெறிக்கவிடுகிறது.

கதையை யூகிக்கும் சில தருணங்கள் ட்ரெய்லரில் நிறைந்தாலும், காட்சி, வசனம், இசை எனப் பலவற்றின் மீது பெரும் நம்பிக்கையை ரசிகர்களிடம் படத்தின் முதல்பாகம் பெற்றுவிட்டது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை விரைவில் பூர்த்திசெய்ய ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிறது கேஜிஎஃப்-2. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.