புதுச்சேரி:
தெலுங்கானா மாநில கவர்னராக தமிழகத்தை சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வருகிறார். அவர் புதுவை கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
புதுவையில் இருக்கும் போது மக்களுக்கான பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து தொடங்கி வைத்து வருகிறார்.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். புதுவையில் இதுவரை முழுமையான தமிழ்தெரிந்த கவர்னர்கள் பணியாற்றியதில்லை. ஆனால், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களை சந்திக்கும் போதும் அரசியல் பிரமுகர்களை சந்திக்கும் போதும் தமிழில் பேசி வருவதால் அவரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் நாகர் கர்னூல் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அப்பபூர்செஞ்சூ என்ற இடத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் புதிய திட்டத்தை பரீட்சார்த்த முறையில் செயல்படுத்த அரசு முடிவு செய்திருந்தது.
இந்த திட்டத்தை தொடங்கி வைக்க அவர்கள் வசிக்கும் அடர்ந்து காட்டுப்பகுதிக்குள் 15கி.மீ தூரம் கவர்னர் தமிழிசை சென்றார். அங்கு அவர்களின் குடிசை வீடுகளுக்குள் சென்று பார்வையிட்டார்.
பழங்குடியின குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கும் தமிழிசை சென்றார். அந்த குழந்தைகளிடம் பேசினார். நன்றாக படிக்க வேண்டும் என குழந்தைகளிடம் அறிவுறுத்தினார்.பெண்களிடம் உணவு பழக்க முறையை ஆவலுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.
பழங்குடியின மக்கள் மருத்துவ வசதிக்காக இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டத்தை கவர்னர் தொடங்கி வைத்தார். 2 இருசக்கர ஆம்புலன்சுகளை அவர்களுக்கு கவர்னர் தமிழிசை வழங்கினார்.
அந்த ஆம்புலன்சுகளை அக்கிராமத்திலேயே நிறுத்திவைக்க உத்தர விட்டார்.
பழங்குடியின நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையில் இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது.