ஜம்மு – காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்களுக்கான எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 1990-களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பயங்கரவாதம் அதிகரித்தது. காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தி வந்த தீவிரவாதிகள், தங்கள் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கொன்று குவித்தனர்.
இதில் காஷ்மீரை சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகளின் அராஜகத்துக்கு பயந்து ஆயிரக்கணக்கான இந்துக்களும், சீக்கியர்களும் காஷ்மீரில் இருந்து வெளியேறி, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழல் ஏற்பட்டது.
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய இனப்படுகொலையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. இதனிடையே, இந்த படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தற்போது நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், காஷ்மீரில் இந்துக்களையும், சீக்கியர்களையும் படுகொலை செய்தவர்களை கண்டுபிடிக்க ஏதுவாக எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘வீ தி சிட்டிஸன்ஸ்’ (we the citizens) என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், “காஷ்மீரில் வெளியேறி அகதிகளாக வாழ்ந்து வரும் இந்துக்களையும், சீக்கியர்களையும் மறு குடியமர்வு செய்ய வசதியாக அவர்களின் மக்கள்தொகையை கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும். காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்களின் வெளியேற்றத்துக்கு பிறகு அங்கு விற்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM