ஸ்ரீநகர்:
காஷ்மீரில் சமூக விரோத செயல்களை அரங்கேற்றும் பயங்கரவாதிகள், உள்ளூர்வாசிகளின் வீடுகளில் தங்கியிருந்து தாக்குதல்களுக்கு திட்டமிடவும், செயல்படுத்தவும் செய்கிறார்கள்.
அங்கு பாதுகாப்பு படையினருடன் நடந்து வரும் மோதல்கள் பெரும்பாலும் இந்த வீடுகளிலேயே நடக்கிறது. இவ்வாறு உள்ளூர்வாசிகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே பயங்கரவாதிகளுக்கு உதவும் சொத்துகள் மற்றும் வீடுகளை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்போரின் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் அறிவித்து உள்ளனர்.
ஸ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2020, 21-ம் ஆண்டுகளில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் 10-க்கு மேற்பட்ட வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.