கடந்த வாரம், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கையில் எம்.பி ஒதுக்கீடு தொடர வேண்டுமா அல்லது ரத்து செய்யலாமா என்பதை கூட்டாக விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்று மக்களவையில் வலியுறுத்தினார். அவரது வலியுறுத்தலை தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தலாம் என்று பரிந்துரைத்தார்.
எம்.பி ஒதுக்கீடு என்றால் என்ன? அதை ரத்து செய்ய அரசு முயற்சிப்பது ஏன்? என்பதை இச்செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
கேந்திரிய வித்யாலயா என்றால் என்ன?
முன்பு கேந்திரிய வித்யாலயா, மத்திய பள்ளிகள் என அழைக்கப்பட்டு வந்தது. அந்த பள்ளியை நிர்வகிக்கும் முழு பொறுப்பு கல்வி அமைச்சகத்திடம் உள்ளது.
இந்த பள்ளிகள், பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் உட்பட மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்காக இரண்டாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1963 இல் தொடங்கப்பட்டது.
மாணவர்களின் பெற்றோர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பிருப்பதால், குழந்தைகளின் கல்வி தடைபடாமல் பார்த்துக்கொள்வதே இதன் நோக்கமாகும்
தற்போது, நாட்டில் சுமார் 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் மானிய விலையில் தரமான கல்வியை வழங்குவது மட்டுமின்றி CBSE வாரியத்தின் முடிவுகளில் சிறந்த இடத்தை பிடித்து வருவதால், பலருக்கு விருப்பமான இடமாக திகழ்கிறது.
எம்.பி ஒதுக்கீடு என்றால் என்ன? ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
பள்ளிகளை நிர்வகிக்கும் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட இருக்கையை ஒதுக்கிட, சிறப்பு சட்டத்தை 1975இல் கொண்டு வந்தது. இது, அவர்களது தொகுதிகளில் சிறப்பாக செயல்பட, எம்.பிக்களுக்கு கூடுதல் பலத்தை வழங்கும் வழியாக பார்க்கப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களை எம்.பிக்கள பரிந்துரைக்கலாம். ஆனால், சில கன்டிஷன்கள் இருந்தன. அவர்களால் 1 முதல் 9 வகுப்பு வரை மட்டுமே பரிந்துரைக்க முடியும். மேலும், பரிந்துரைக்கும் மாணவனின் பெற்றோர் அந்த எம்.பி தொகுதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த எம்.பி ஒதுக்கீடு குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் நிறுத்தப்பட்டது உட்பட பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது சந்தித்து வந்தது. ஆரம்பத்தில், எம்.பி இரண்டு மாணவர்களை ஒரு கல்வியாண்டிற்கு பரிந்துரைக்கலாம் என விதி இருந்தது. பின்னர், அந்த எண்ணிக்கை 2011இல் 5ஆகவும், 2012இல் ஆறாகவும், 2016இல் 10 ஆகவும் உயர்ந்தது. தற்போது, மக்களவையில் 543 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்களும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் எம்.பி ஒதுக்கீடு அடிப்படையில் 7,880 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
எம்.பி. ஒதுக்கீடு தவிர, கல்வி அமைச்சருக்கு(முன்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் என்று அழைக்கப்பட்டது) தனியாக மாணவர்களை பரிந்துரைக்கும் விருப்ப ஒதுக்கீடு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர், ஒரு கல்வியாண்டிற்கு 450 மாணவர்களை பரிந்துரைக்கலாம். எம்.பி. ஒதுக்கீட்டைப் போலவே, கடந்த ஆண்டு பிரதானால் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, பல மாற்றங்களுக்கு இந்த கல்வி அமைச்சரின் விருப்ப ஒதுக்கீடும் உட்பட்டது.
எம்பி ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறும் முறை?
ஒவ்வொரு எம்.பி.யும், வீட்டு முகவரி, மொபைல் நம்பர், இமெயில் ஐடி உட்பட பரிந்துரைக்க விரும்பும் குழந்தை மற்றும் பெற்றோரின் விவரங்கள் அடங்கிய கூப்பனை , அவரது அலுவலகத்தில் இருந்து கேந்திரிய வித்யாலயாவுக்கும், கல்வி அமைச்சகத்துக்கும் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கேந்திரிய வித்யாலயா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அந்த பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அட்மிஷன் பிராசஸ் முறையாக தொடங்கும். எம்.பி பரிந்துரைத்த கூப்பன் நகலுடன், பிறப்பு சான்றிதழ், வீட்டு முகவரி சான்றிதழ் உட்பட தேவையான ஆவணங்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டண சலான் வழங்கப்பட்டு விட்டால் போதும், அந்த மாணவன் பள்ளியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுவிட்டார்.
ஒதுக்கீட்டை ரத்து செய்ய அரசு முயற்சிப்பது ஏன்?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், எம்.பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களை காட்டிலும் அதிகளவில் அந்த ஒதுக்கீட்டில் மாணவர்கள் பயில்கின்றனர். எம்.பி.க்கள், அமைச்சர்கள் பல கோரிக்கைகளைப் பெறுவதால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உதாரணமாக, 2018-19 ஆம் ஆண்டில், அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை 7,880க்கு பதிலாக 8,164 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வி அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட 450 இடங்களுக்கு பதிலாக, அவரது ஒதுக்கீட்டில் 9,402 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதிகப்படியான மாணவர் சேர்க்கை, பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் எண்ணிக்கை விகிதத்தில் சிக்கலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டினர்.
எம்.பி ஒதுக்கீடு நீக்கப்படுவதும், பின்னர் மீண்டும் அமலுக்கு வருவதும் வாடிக்கையாக மாறியது. 1997இல் எம்.பி ஒதுக்கீடு முதன்முதலில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், 1998இல் அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் உத்தரவைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
மார்ச் 2010 இல், UPA-2 அரசாங்கத்தின் கீழ், அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இரண்டு ஒதுக்கீடுகளையும் நிறுத்தி வைத்தார். ஆனால், பின்னர் அரசியல் நெருக்கடியால் எம்.பி ஒதுக்கீட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது மட்டுமின்றி, அதன் எண்ணிக்கையும் 2011,2012 இல் அதிகரித்தார்.
இருப்பினும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்கும் வரை கல்வி அமைச்சரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. NDA அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் MP ஒதுக்கீட்டின் அளவை ஆறில் இருந்து 10 ஆக உயர்த்தியது. . ஆகஸ்ட் 2021 இல், தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது விருப்ப 450 ஒதுக்கீடுகளை ரத்து செய்தார்.
எம்.பி ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுக்க காரணம் என்ன?
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி இந்த விவகாரத்தை எழுப்பியதையடுத்து, பல எம்.பிக்களால் குரல் எழுப்பப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை நிராகரித்து, பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ளும் எம்.பிக்களுக்கு 10 இருக்கை மட்டுமே வழங்குவது போதுமானது அல்ல என திவாரி கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில்,நாங்கள் ஒவ்வொருவரும் 15-20 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 35-40 லட்சம் மக்கள் உள்ளனர். குறைவான எம்.பி ஒதுக்கீட்டால், நிறைய சிரமங்களை சந்திப்பதை பதிவு செய்ய விரும்புகிறோம். பலர் கோபம் கொள்கிறார்கள். எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது. ஒன்று, ஒதுக்கீட்டின் அளவை 10ல் இருந்து 50 ஆக உயர்த்துங்கள் அல்லது அதை ரத்து செய்யுங்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த பிரதான், அவை ஒத்துழைத்தால் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடும் என்றார். அப்போது பேசிய அவர், நாம் மக்கள் பிரதிநிதிகள். ஒரு சிலரின் பிரதிநிதிகள் அல்ல என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரைத்தார்.
வெள்ளிக்கிழமை, பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி, எம்பி ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவதற்கு ஆதரவாக மாநிலங்களவையில் zero-hour நோட்டீஸை முன்வைத்தார்.