தங்கள் ஆதாயத்திற்காக உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டாக துண்டாடும் வாய்ப்புகள் அதிகம் என உக்ரைன் இராணுவ புலனாய்வு தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 30 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. 48 மணி நேரத்தில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என களமிறங்கிய ரஷ்ய துருப்புகள், உக்ரைன் நகரங்களில் கடும் சேதங்களை விளைவித்தாலும், இதுவரை அவர்களின் இலக்கை எட்டவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், மே 9ம் திகதிக்குள் போரை முடிவுக்கு கொண்டுவரும் திட்டமும் ரஷ்யாவிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் இராணுவ புலனாய்வு தலைவர் வெளியிட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டை கண்டிப்பாக தம்மால் கைப்பற்ற முடியாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர்,
அதனால் கொரியா போன்று உக்ரைனை இரண்டாக பிளக்கும் சூழ்ச்சிகளை புடின் முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில் இணையான அரசாங்க கட்டமைப்புகளை அமைக்கவும் மற்றும் உக்ரேனிய நாணயத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் ரஷ்ய முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார்.