சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்று, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி கே பழனிசாமி தெரிவிக்கையில்,
“நான் முதலமைச்சராக இருந்த போது வெளிநாடு சென்றதை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகஸ்டாலின் விமர்சித்திருந்தார். தற்போது, ஸ்டாலினின் துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்க அல்ல, சுற்றுலா போல் உள்ளது என்று ஸ்டாலினை பார்த்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்” என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் சசிகலா குறித்து கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்துள்ள எடப்பாடி கே பழனிச்சாமி, அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சசிகலா குறித்து அண்ணன் ஓபிஎஸ் தெரிவித்த கருத்துகள் அவரது தனிப்பட்டது ஆகும்.
தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப் பிரச்சினைகளிலும் தான் வேறுபாடு உள்ளது” என்று எடப்பாடி கே பழனிசாமி அந்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.