டெல்லி: சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்த ஒருவருக்கும், சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள ஒரு கிராமத்தை பெண்ணுக்கும் இன்று காலை திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதற்காக தர்மாவரத்தை சேர்ந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 52 பேர், தனி பஸ்சில் நேற்று மாலை புறப்பட்டனர். இரவு 11.30 மணியளவில் பாக்ராபேட்டை மலைப்பாதை வழியாக வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. அப்போது அங்குள்ள சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டு விபத்துக்குள்ளானது. மலைப்பாதை கும்மிருட்டில் பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்சில் இருந்தவர்களின் அழுகை குரல் மட்டுமே கேட்டது. சத்தம் கேட்டு அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சுற்றிலும் பார்த்தபோது இருள் சூழ்ந்திருந்ததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. உடனே சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்.பி. வெங்கடஅப்பல நாயுடு மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முற்றிலும் நொறுங்கிய பஸ்சின் இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை போராடி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் டிரைவர் நபிரசூல், பஸ்சில் வந்த மல்லிசெட்டி பகுதியை சேர்ந்த வெங்கப்பா(60), கணேஷ் (40), காந்தம்மா(40), முரளி(45), அஸ்வினி(8) மற்றும் பஸ் கிளீனர் உட்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல். உயிரிழந்தோர் கும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என கூறினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; உயிரிழந்தோர் கும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.