புதுடெல்லி: சீனாவின் எல்லைக்கு அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 நாள் வான்வெளி பயிற்சியில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 நாட்கள் வான்வௌி பயிற்சியில் ஈடுபட்டனர். சிலிகுரி பிரிவு என்பது நேபாளம், பூடான் மற்றும வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியாகும். வடகிழக்கு பிராந்தியங்களை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. ராணுவ கண்ணோட்டத்தில் இந்த பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 24, 25ம் தேதிகளில் இந்த பயிற்சி நடைபெற்றது. ராணுவத்தின் வான்வழி விரைவு குழு வீரர்கள் 600 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். வானில் பறக்கும் விமானங்களில் இருந்து பாராசூட் மூலமாக வீரர்களை இறக்குதல், கண்காணிப்பு மற்றும் இலக்கை குறிவைத்து குதித்தல், விமானத்தில் இருந்து குதிப்பதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. கடந்த மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக இந்த பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.