திருமலை: சென்னை தீவுத்திடலில் வரும் 16ம் தேதி சீனிவாச திருக்கல்யாணம் நடக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில் திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் வரும் 16ம் தேதி சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான, ஏற்பாடுகளை திருமலை திருப்பதி கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி நேற்று அதிகாரிகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, சென்னை ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீபத்மாவதி தாயார் கோயில் கட்டுமான பணிகள், மின்வாரிய பணிகளை கூடுதல் செயல் அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: சென்னையில் சீனிவாச திருக்கல்யாணத்தை நடத்த சென்னை உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர்ரெட்டி மற்றும் பிற உறுப்பினர்கள் முன்வந்தனர். இதற்கான, ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது. இந்த திருக்கல்யாணத்தில் அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளது. இதனால், பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் நடத்தப்படும். சேகரின் வழிகாட்டுதலில் மேடை, தடுப்புகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுவாமி, தாயார் உற்சவமூர்த்திகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், அன்னமாச்சார்யா, கலை குழுவினர் மற்றும் இதர துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் திருக்கல்யாணம் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி மூலம் ஆன்மீக நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கப்படும். திருக்கல்யாணத்தின் மூலம் தமிழக மக்களுக்கு ஏழுமலையான் அருள்கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர், தலைமை பொறியாளர் நாகேஸ்வர், தேவஸ்தான தொலைக்காட்சி நிர்வாக செயல் அதிகாரி சுரேஷ்குமார், கண்காணிப்பு பொறியாளர் ஜெகதீஷ்வர், மண்டல பொறியாளர் ரவிசங்கர், துணை செயல் அதிகாரி ரமணபிரசாத், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.