சேலம்: சேலத்தில் ஒரு ரூபாய் நாணயங்களைக் கொண்டு ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
சேலம், அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இளம் வயது முதலே மிக உயர்ந்த விலையில் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். அதற்காக சிறுகச்சிறுக உண்டியலில் ரூபாய் நாணயங்களை சேமிக்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில் நாணயத்தின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆனது.
அப்போது அவர் பார்த்துவைத்த பைக்கை வாங்க ரூ.2.50 லட்சம் தேவைப்பட்டது. அப்போதுதான் பூபதிக்கு ஒரு யோசனை வந்தது. ஏன் மொத்தப் பணத்தையும் நாணயங்களாக மாற்றி பைக் வாங்கக்கூடாது என்று அவருக்குத் தோன்றியது. அதன்படி பல்வேறு முயற்சிகளுக்குப் பின் ரூ.2.50 லட்சத்தையும் ரூ.1 நாணயங்களாக சேகரித்தார்.
ஆனால், 2.50 லட்சம் மதிப்புள்ள ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து, இருசக்கர வாகனம் வாங்க முயற்சித்தபோது, வாகன விற்பனை நிறுவனங்கள் யாரும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஒருக்கட்டத்தில் பூபதி மனவேதனை அடைந்தார்.
பல மாதங்களாக நண்பர்களுடன் முயற்சி செய்த பூபதி, அம்மாபேட்டை பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றில், தனது விருப்பத்தை எடுத்துக்கூறியுள்ளார். அப்போது பூபதி சேகரித்து வைத்த ஒரு ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொண்டு, அந்த நிறுவன அதிகாரிகள் வாகனம் விற்க முன்வந்தனர்.
இதனையடுத்து பூபதி தான் சேகரித்து வைத்த ஒரு ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக கட்டி அம்மாபேட்டை பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்துக்கு கொண்டு வந்தார். அங்கு நாணயங்களை குவியலாக தரையில் கொட்டி நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களைக் கொண்டு 10 மணி நேரம் ஒரு ரூபாய் நாணயத்தை எண்ணி ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றார்.
இதனை பெற்றுக்கொண்ட பூபதி, தனது இளம் வயது ஆசையை நீண்ட ஆண்டுகளுக்கு நிறைவேறியதற்கு உதவியாக இருந்த நண்பர்களுக்கு நன்றி கூறிக்கொண்டார். சிறுகச்சிறுக சேமித்தால் பெருக வாழலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப பூபதியின் சேமிப்பு பண்பை நண்பர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
இது குறித்து இளைஞர் பூபதி அளித்தப் பேட்டியில் “எனக்கு பைக் வாங்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே ஆசை. அதற்காக சிறுகச்சிறுக பணம் சேர்த்தேன். ஒரு ரூபாயாகவே ரூ.10 ஆயிரம் சேர்ந்தது. அதன் பின்னர் ரூ.5 நாணயங்கள் சேர்த்தேன். பின்னர் எல்லாவற்றையுமே ஏன் ரூ.1 நாணயமாக சேர்க்கக் கூடாது எனத் தோன்றியது. அதனால் ரூ.1 நாணயமாகவே சேர்த்தேன். இதற்காக கடைகள், கோயில்கள், வங்கிகளில் நாணயங்களைப் பெற்றேன். இவ்வாறாக ரூ.1 நாணயாமாகவே சேர்க்க 3 மாதங்கள் ஆயின.
பின்னர் இந்தக் கடையை அணுகி மேலாளரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். பலரும் ஒப்புக் கொள்ளாத நிலையில் இவர் மட்டுமே ஒப்புக் கொண்டார். சிறுகச்சிறுக பணம் சேமிப்பது எவ்வளவு கடினமானது என்பதை தெரிந்து கொள்ளவும் பிறருக்கு உணர்த்துவும் இதைச் செய்தேன். சிறுவயதில் எளிதாக பணம் சேமிப்போம். பெரியவர்களானது அதை விட்டுவிடுகிறோம்.
இதற்கான பணத்தை எடுத்துக் கொண்டு சேலம், கோவை, மதுரை என பல நகரங்களின் வங்கியையும் அணுகி பணத்திற்கான நாணயங்களை மாற்றினேன். இப்போது என் விருப்பப்படி வாங்கிவிட்டேன்”என்றார்.