லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த சூழலில், அக்கட்சி தலைவர் மாயாவதி கூறும்போது, இந்த தேர்தலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டு பொய்யான பிரசாரம் மேற்கொண்டது. உ.பி.யில் பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வரவில்லை எனில், மாயாவதியை நாட்டின் ஜனாதிபதி ஆக்குவோம் என கூறியது.
அதனாலேயே பா.ஜ.க.வை நீங்கள் ஆட்சிக்கு வர அனுமதித்து விட்டீர்கள் என்று தனது கட்சி தோல்விக்கான காரணங்களை அவர் விளக்கினார்.
ஜனாதிபதியாவது பற்றி எனது கனவில் கூட நான் நினைத்து பார்த்தது இல்லை. நீண்ட காலத்திற்கு முன் கன்ஷிராம் ஜி கூட இந்த வாய்ப்பினை மறுத்தவர். நான் அவரது உறுதியான சிஷ்யை என்று 4 முறை முன்னாள் முதல்-மந்திரியான மாயாவதி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் பணியில் தனது வாழ்வின் ஒவ்வொரு தருணமும் செலவிடப்படும் என்று கூறிய அவர், மனமுடைந்து போக கூடாது என தனது கட்சியினரை கேட்டு கொண்டார்.