உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உக்ரைன் நாட்டின் முக்கிய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் சந்தித்துப் பேசினார். ஏற்கெனவே இந்த விஷயம் தொடர்பாக ஜோ பைடன் நேட்டோ கூட்டமைப்பிலும், ஐரோப்பிய யூனியன் படைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்தில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைன் மாக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பைடன், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.” என்று அவர்களிடம் ஆதரவாகப் பேசினார். இதுவரை 3.7 மில்லியன் மக்கள் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபரின் போலாந்து சந்திப்பு குறித்து உக்ரைன் நாடாளும்மான்ர உறுப்பினர் இன்னா சோவ்சன் (Inna Sovsun) தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்க அதிபரின் ஒரு வார்த்தை கூட உறுதியளிக்கும் வகையில் இல்லை.” என அவர் கூறியிருக்கிறார்.
அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கூறுகிறேன். அமெரிக்க அதிபரின் பேச்சில் ஒரு வார்த்தை கூட, உக்ரைனுக்கு இப்போது கிடைப்பதை விட இன்னும் கூடுதல் உதவிகள் கிடைக்கும் என உறுதியாகக் கூறும் வகையில் இல்லை. (இப்போது கிடைக்கும் உதவிகளே போதவில்லை)
அவர் போலந்தில் இருந்தவர்களுக்கு ஆறுதல் கூறியது மகிழ்ச்சி. ஆனால் உண்மையில் குண்டுகள் வெடித்துக் கொண்டிருப்பது கீவ்(kyiv) மற்றும் கார்கிவில்(kharkiv) தானே தவிர வார்சாவில்(Warsaw) இல்லை.” என்று பதிவிட்டிருக்கிறார்.
`வார்சா’ நகரம் போலந்து நாட்டின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.