'தமிழகத்துக்கு நன்மை செய்ய ஸ்டாலின் துபாய் செல்லவில்லை' – எடப்பாடி பழனிசாமி 

சேலம்: துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் தருவாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சார்பாக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது என்றும், தமிழக மக்களுக்கு நன்மை செய்யவோ, தமிழகத்துக்கு தொழில் தொடங்கவோ முதல்வர் அங்கே செல்லவில்லை என மக்கள் பேசிக் கொள்வதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது: ” முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அங்கிருக்கின்ற அரங்கைத் திறந்து வைப்பதும் சரி. ஆனால், முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை ஒரு குடும்பச் சுற்றுலாவாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். இதற்காக தனி போயிங் விமானத்தை எடுத்து, ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் அந்த விமானத்தின் மூலம் துபாய் சென்றிருக்கிறார்கள். இந்த பயணத்துக்கு முன்பாகவே, ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றது தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது அவரது குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்காகவா? என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய பார்வைக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனென்றால், முதல்வர் மட்டும் சென்றிருந்தால் பரவாயில்லை. அந்த துறையைச் சேர்ந்த அமைச்சரோ, செயலாளரோ சென்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் முதல்வரின் குடும்பமே துபாய்க்கு சென்றிருக்கிற போது, மக்கள் பேசுவது, தமிழக மக்களுக்கு நன்மை செய்ய, தமிழகத்துக்கு தொழில் தொடங்க முதல்வர் அங்கே செல்லவில்லை.

முதல்வர் துபாய்க்கு சென்றது அவருடைய தனிப்பட்ட காரணத்திற்காகவென்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இவர்கள் புதிய தொழில் தொடங்குவதற்காக அங்கே சென்றுள்ளதாக மக்கள் பேசுவதை எங்களால் கேட்க முடிகிறது. அதுமட்டுமல்ல, சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கப்பட்ட நாள் 1.10.2021 நிறைவடைவது 31.2.2022. இன்னும் ஒரு 4 நாளில் முடிவடைய உள்ளது. இந்த கண்காட்சி முடியும் தருவாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சார்பாக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது. இன்னும் 4 நாளில் கண்காட்சி முடியப்போகிறது. கண்காட்சி தொடங்கியபோது தமிழக அரங்கத்தை திறந்திருந்தால் பரவாயில்லை.

எனவே இதை ஒரு சாக்காக வைத்து துபாய் செல்வதற்கு இதை பயன்படுத்தியுள்ளனர். அதோடு நான் வெளிநாடு சென்றபோது, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் விமர்சித்தார். நான் வெளிநாடு சென்றபோது, அனைவரும் பயணிக்கும் விமானத்தில்தான் பயணித்தேன். என்னுடன் அமைச்சர்களும், அந்தந்த துறையின் செயலாளர்கள் வந்திருந்தனர். அப்போது என்னுடன் வந்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் லண்டனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நம்முடைய ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் கலந்தாலோசித்து ஆய்வு செய்தோம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.